சிலாங்கூர் சுல்தான் அறிக்கைமீது மலேசியாகினி செய்தித்தளத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக போலீசார் சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பாரியை விசாரித்துள்ளனர்.
அம்னோ செனட்டர் முகம்மட் எசாம் முகம்மட் செய்த புகாரின் தொடர்பில் இன்றுகாலை ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இரு போலீஸ் அதிகாரிகள் அவரை அரசநிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரணை செய்தனர்.
“கடந்த வாரம் எசாம் செய்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்றது”, என்று மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.
இதே விவகாரம் தொடர்பில் இரண்டு நாள்களுக்கு முன்னர் அவரும் மலேசியாகினி செய்தியாளர் ஒருவரும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய(எம்சிஎம்சி)த்தால் விசாரிக்கப்பட்டனர்.
எம்சிஎம்சி இன்று பிற்பகல் மலேசியாகினி பணியாளர்களை விசாரிக்கவுள்ளது. போலிசாரும் இன்று மலேசியாகினி அலுவலகத்துக்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.