யூஐஏ அஜிஸ் பேரி-க்கு காரணம் கோரும் கடிதத்தை வழங்கியுள்ளது

அண்மையில் மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு விவகாரங்களில் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்த பின்னர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் அப்துல் அஜிஸ் பேரி-க்கு அந்தப் பல்கலைக்கழகம் காரணம் கோரும் கடிதத்தை வழங்கியுள்ளது.

மலாய் மொழியில் சுருக்கமான யூஐஏ என அழைக்கப்படும் அந்த பல்கலைக்கழகம் இன்று பிற்பகலில் அந்தக் கடிதத்தை அப்துல் அஜிஸிடம் வழங்கியதாக மலேசியாகினியிடம் உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த கடிதத்தின் உள்ளடக்கம் முழுமையாகத் தெரியவில்லை. அப்துல் அஜிஸுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்தச் செய்தி எழுதப்பட்ட நேரம் அலுவலக நேரத்துக்கு அப்பாற்பட்ட நேரமாக இருப்பதால் அந்த விவகாரம் பற்றி பல்கலைக்கழக அதிகாரிகளுடனும் உறுதிப்படுத்த முடியவில்லை.

கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி பல இன மக்கள் கலந்து கொண்ட நன்றி தெரிவிக்கும் விருந்தின் போது சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை நடத்திய ‘சோதனை’ மீது சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட ஆணை குறித்து அப்துல் அஜிஸ் தெரிவித்த கருத்துக்களை போலீஸ் புலனாய்வு செய்து வருகிறது.

அப்துல் அஜிஸ், அரசர் அமைப்பு முறையை வெறுக்குமாறு பொது மக்களைத் தூண்டி விடுவதாகக் குற்றம் சாட்டி செனட்டர் எஸாம் முகமட் நூர், அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார்.

அது தேசத் துரோகமானது என்றும் பாதுகாப்புக்கும் ஒழுங்கிற்கும் மருட்டலாக உள்ளது என்றும் எஸாம் தமது  புகாரில் குறிப்பிட்டிருந்தார்.