சீபோர்ட் பள்ளி மாணவர்களை மிரட்டும் வேலையை நிறுத்துக

seaportகல்வி  அமைச்சும்,  மாநிலக்  கல்வித்  துறையும், சீபோர்ட்  பள்ளி  மாணவர்கள்  புதிய  பள்ளிக்கு  இடமாறிச்  செல்ல மறுத்தால்  அவர்கள்  பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள்  என்று  மிரட்டுவதை  நிறுத்த  வேண்டும்.

புதன்கிழமை மாநிலக்  கல்வி  இயக்குனர்  மஹ்முட்  கரீம்,  அவ்வாறு  மிரட்டியதாகக்  கூறப்படுகிறது.

“மாநிலக்  கல்வித்  துறை  இப்படி  மிரட்டுவதை  விடுத்து  நல்ல  தீர்வு  காண  முனைய  வேண்டும்”,  என  சீபோர்ட்  பள்ளியைக்  காப்போம்  இயக்கத்தின்  செயலாளர்  கண்ணன்  இராமசாமி  கேட்டுகொண்டார்.

முன்பு எஸ்ஜேகேசி  டமன்சாரா-விலும்  இதேபோன்ற  நிலைதான்  ஏற்பட்டது.  ஆனால்,  அப்போது  மாணவர்கள்  விலக்கப்படுவார்கள்  என்றெல்லாம்  மிரட்டப்படவில்லை.

அது  மட்டுமல்லாமல்,  அது  மேலும்  எட்டாண்டுகளுக்கு  அதே  இடத்தில்  செயல்படவும்  அனுமதிக்கப்பட்டது   என்பதையும்  அவர்  சுட்டிக்காட்டினார்.

பழைய சீபோர்ட் தமிழ்ப்பள்ளியின் கட்டடம் சிலாங்கூர் மேம்பாட்டு கழகத்தின் (பிகேஎன்எஸ்) நிலத்தில் அமைந்துள்ளது.  அந்நிலத்தை பிகேஎன்எஸ் மீண்டும் எடுத்துக்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

ஆனால், மாநில அரசு அலுவலக பிரதிநிதி என்.எம். ராஜன் அந்த நிலத்தை  பள்ளிக்கு அளைத்து அதனை அரசு பதிவேட்டில் பதிவு செய்ய கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையில், சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் தலைமை தனிப்பட்ட செயலாளர் முகமட் யாசிட் பிடின் இந்நில விவகாரம் குறித்துseaport Tamil school protst banner1 பெட்டாலிங் மாவட்ட அதிகாரி மிஸ்ரி க்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தின் நகல் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் தலைவர் குமார் வனதனுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ஆர். கண்ணன் தெரிவித்தார்.

அக்கடிதத்தில் நிலத்தை அரசு கெஜட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று பெற்றோர்-ஆசிரியர் சங்கம் செய்துள்ள மனுவை பரிசீலிக்கும்படி மிஸ்ரி கேட்ட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

“இந்த விவகாரத்தில் இக்கடிதம் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கண்ணன் கூறினார்.

அமைச்சர்களும் துணை கல்வி அமைச்சரும் இப்பிரச்சனை குறித்து எவ்வித பேச்சுவார்த்தைக்கும் ஆர்வம் காட்டாமல் இருந்து வருவதால் தாம் இதனை ஐநாவின் யுனெஸ்கோவின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போவதாக கண்ணன் மேலும் கூறினார்.