“கிறிஸ்துவ ஆட்சி”: உத்துசான் உரிமத்தை ரத்து செய்வீர், எம்பி

“போலியான அறிக்கையை வெளியிட்டதற்காகவும்” பினாங்கு மாநிலத்தில் ஒரு கிறிஸ்துவ ஆட்சியை உருவாக்க கிறிஸ்துவ ஆயர்கள் சதி செய்தனர் என்ற கூற்றுக்கு தீபம் போட்டதற்காகவும் உத்துசான் மலேசியாவின் உரிமத்தை உள்துறை அமைச்சு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் டிஎபி ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெப் ஊய் இவ்வேண்டுகோளை விடுத்தார்.

“பதற்ற நிலையை உருவாக்கியதற்காகவும் சமயங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த முயன்றதற்காகவும் உத்துசானின் பிரசுர உரிமத்தை உள்துறை அமைச்சர் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ய வேண்டும் என்று நான் கோருகிறேன். பொய்யர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடாது”, என்றாரவர்.

சமீபத்தில், கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிப்லி நூர்டினுக்கு அளிக்கப்பட்ட எழுத்து மூலமான பதிலில், தேசநிந்தனை சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவ்வாறான சதிக்கு “உறுதியான ஆதாரம் இல்லை” என்பதோடு சட்டத்துறை அலுவலகம் “மேற்கொண்டு நடவடிக்கை இல்லை” என்று கூறியிருப்பதாகவும் அமைச்சு கூறியது.

ஆனால், டிஎபி முன்னாள் உறுப்பினர் முகமட் ரஸாலி அப்துல் ரஹ்மான் “கிறிஸ்துவ அரசு சதி இருக்கிறது” என்று இன்னும் வலியுறுத்துகிறார்.