பதவி பறிப்பா?, அப்படி ஒன்றும் இல்லை, காலிட்

 

MB Khalid - postகாஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட திடீர் புரட்சியா என்ற கேள்விக்கு, “அப்படி ஒன்றும் இல்லை”, என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறினார்.

“ஒரு மந்திரி புசாரின் நியமனத்திற்கு (பக்கத்தான் ரக்யாட்டில்) மூன்று தரப்பினரின் ஒப்புதல் இருக்க வேண்டும். மந்திரி புசார் வேட்பாளார் தேர்வு செய்யப்பட்டு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

“அவர்கள் சுல்தானிடமும் தெரிவித்து அவரின் அனுமதியையும் பெற வேண்டும். ஏராளமான நடமுறைகள் இருக்கின்றன”, என்று அவர் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தம்மை பதவியிலிருந்து மாற்றும் நோக்கத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வார் போட்டியிடுகிறார் என்று கூறப்படுவதை காலிட் நிராகரித்தார்.

“(அது குறித்து) பேச்சுகள் ஏதும் இல்லை”, என்று கூறிய காலிட், அவருக்கு எதிராக ஒரு திடீர் புரட்சி இருக்குமானால் அவர் “வியப்படையப் போவதில்லை”, என்று மேலும் கூறினார்.

டிஎபியும் பாஸ்சும் ஒப்புக்கொண்டால் பதவி துறக்க ஒப்புகொள்வீரா என்று வினவப்பட்டபோது, “மூன்று தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து அவ்வாறு முடிவெடுத்தால் மட்டுமே அதனைச் செய்ய முடியும்”, என்று காலிட் பதில் அளித்தார்.

“விவாதம் இருந்தாக வேண்டும். தற்போது அப்படி எதுவும் இல்லை”, என்பதை அவர் வலியுறுத்தினார்.

 

 

 

 

TAGS: