தீபாவளி: நாடாளுமன்ற கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது சரியான நடவடிக்கை, குலசேகரன்

தீபாவளிக்கு முதல்நாள், அக்டோபர் 25, 2011, நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாது என்ற முடிவு வரவேற்கப்புக்குரியது. மக்களவைத் தலைவர் அம்முடிவை இன்று அறிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டம் அக்டோபர் 25 இல் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவு வருத்தப்பட வேண்டியதொன்றாகும் என்று கூறிய டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், “நாடாளுமன்ற அமர்வுக்கான தேதிகளை நிர்ணயிப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்?”, என்று வினவினார்.

சம்பந்தப்பட்டவர்களை இழுத்து வந்து நமது நாட்டில் அனுசரிக்கப்படும் பல்வேறு விழாக்கள் பற்றி அவர்கள் உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை அவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்றார்.

தீபாவளிக்கு முதல்நாளில் பள்ளி சோதனைகள் நடத்தப்படுவது குறித்து நாம் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வது திருநாளைக் கொண்டாடும் சிலருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.

ஹரிராயா, தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் ஆகிய விழாக்களின் முதல்நாளில் மாணவர்கள் சோதனைக்கு அமர்வதற்கு வகை செய்யும் முடிவுகளால் பல ஆசிரியர்களும்கூட பாதிக்கப்படுகின்றனர் என்பதை குலசேகரன் சுட்டிக் காட்டினார்.

பொதுவாக, இவ்விழாக்கள் ஆண்டு இறுதியில் கொண்டாடப்படுகின்றன. அதே சமயத்தில்தான் பள்ளி சோதனைகளும் நடத்தப்படுகின்றன. இவற்றை சரியானபடி மாற்றி அமைப்பது சிறப்பாகும் என்றாரவர்.

“நமது செழிப்புமிக்க நாடு பல்லின மக்கள், பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் மற்றும் பல்வேறு சமயங்களைப் பின்பற்றும் சமூகங்கள் ஆகியவற்றை கொண்டதாகும். நமது மக்களின் வெவ்வேறான தன்மை மற்றும் அவர்களின் கலாச்சாரங்கள் ஆகியவற்றை அரசாங்கம் உட்பட அனைவரும் பயன்படுத்தி பலனடைய வேண்டும்”, என்று குலசேகரன் கூறினார்.