ஹிம்புன் தலைவர்கள் மதமாற்ற-எதிர்ப்புப் பேரணிவழி உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்குப் பதில் பேச்சுகளில் ஈடுபடலாம் என்கிறார் மலேசிய தேவாலயங்கள் மன்றத் தலைவர் பேராயர் தாமஸ் ட்சென்.
“பேரணி உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதாகத்தான் அமையும்.சமுதாய நல்லிணக்கத்துக்கு உதவாது.
“உதவ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்மையில் இருக்குமானால் பேச்சு நடத்த வேண்டும்.அதில் எல்லாரும் தெளிவான மனத்துடன் கலந்துரையாடலாம்.அதுவே விவேகமான அணுகுமுறையாகும்”, என நேற்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது அவர் குறிப்பிட்ட்டார்.
முஸ்லிம்களை மதம் மாற்றுவதாகக் கூறப்படும் சர்ச்சையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் சிலாங்கூர் சுல்தான் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், பேரணி நிலைமையை மேலும் மோசமடைய வைக்கும் என்றாரவர்.
இதே கவலை நாட்டின் மிகப் பெரிய அனைத்து சமய அமைப்பான மலேசிய பெளத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோயிச ஆலோசனை மன்றத்தின் தலைமைச் செயலாளருக்கும் உண்டு.
“மேல் நடவடிக்கை இல்லை என்று சுல்தான் கூறியிருந்தார்….சுல்தானே அப்படி ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும்போது ஒரு மில்லியன் பேர் ஒன்றுகூடி எதைக் காண்பிக்கப் போகிறார்கள்?.முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், அவர்களின் நம்பிக்கை வலுவாக உள்ளது என்பதைக் காண்பிக்கப் போகிறார்களா?அதனால் ஆகப் போவது என்ன?”, என்று பிரேமதிலகா கேடி ஸ்ரீசேனா வினவினார்.
‘அரசியல் தலையீடு’
பேரணி அரசியல் கலப்பற்றது என அதன் ஏற்பாட்டாளர்கள் கூறினாலும் அதை பிரேமதிலகா நம்பவில்லை.
“அரசியல் தலையீடு இருப்பதாகவே நினைக்கிறேன்.அதனால்தான் பாஸ் அதில் கலந்துகொள்ளவில்லை.
“எவர் வேண்டுமானாலும் தம்மை அரசியல் தொடர்பற்றவர் என்று கூறிக்கொள்ளலாம், (பெர்காசா தலைவர்) இப்ராகிம் அலிகூட அரசியல் தொடர்பற்றவர் என்றுதான் கூறிக்கொள்கிறார்-ஆனாலும் அவர் ஓர் அரசியல்வாதி, இதுவோ சமய விவகாரம்”.
பேரணி மற்ற சமயங்களை எதிர்க்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது, அது தேவையற்றது என்றாரவர்.
“விரும்பத்தகாத எதுவும் நிகழக்கூடாது என்று வேண்டிக்கொள்வோம்”.
முஸ்லிம்-அல்லாதாரை மதமாற்றும் நடவடிக்கைகள் நடக்கத்தான் செய்கின்றன. அதற்காக மற்ற சமயங்கள் இதுபோல் ஆர்ப்பாட்டம் செய்ததில்லை என்று பிரேமதிலகா கூறினார்.
ஹிம்புனான் சஜூத்தா உம்மட்(மில்லியன் முஸ்லிம்களின் ஒன்றுகூடல்) என்றழைக்கப்படும் பேரணி சனிக்கிழமை ஷா ஆலம் ஸ்டேடியத்தில் நடைபெறும்.