வேதமூர்த்தி விலகல்: எல்லாம் எதிர்பார்த்ததே!

– முனைவர் ஆறு. நாகப்பன்

 

1-hindrafஏறத்தாழ எட்டு மாதங்களுக்குப் பிறகு வேதமூர்த்தி பிரதமர் துறையின் துணையமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். பிரதமரின் மழலை நம்பிக்கையை நம்பி கடந்த பொதுத்தேர்தலில் அவரோடு வேதமூர்த்தி கைகோர்த்த போதே பிரதமர் அவரையும் ஏமாற்றுவார், அவர் பிரதிநிதித்த இந்தியர்களையும் ஏமாற்றுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

 

என்றாலும் வேதமூர்த்திக்கும் வேறு வழியில்லை. தமது போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வியூகமாகத் தேர்தல் கால பேச்சுவார்த்தைகளை அவர் முன்னெடுத்தார். பாக்காதான் தலைவர்களோடு அவர் பேசிய போது அங்கிருந்து நம்பிக்கை தரும் எந்த வாக்கும் வரவில்லை. அதே சமயத்தில் வேதமூர்த்தியின் இந்தியர்களுக்கான ஐந்தாண்டு மேம்பாட்டுத் திட்டத்தை பாக்காதான் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு அவர்களுக்குச் சிறந்த காரணங்கள் இருந்தன.

 

ஒன்று: ஹிண்ட்ராப் ஊதி வெடித்த பலூனாய்ப் போயிருந்தது. ஹிண்ட்ராப் தலைவர்களில் உதயகுமார் தனித்து நிற்க, மற்றவர்கள் எல்லாரும் ஏற்கனவே பாக்காதானில் ஐக்கியமாகியிருந்தனர். மிச்சம் இருந்தவர் வேதமூர்த்தி மட்டும்தான். வேதமூர்த்தியை ஒரு பெரிய சக்தியாகப் பாக்காதான் கருதவில்லை.

 

இன்னொன்று: பாக்காதான் தாங்கள் பாரிசானைப் போல இன ரீதியில் செயல்படவில்லை என்று கூறுகின்றனர். (இந்தக் கூற்று இந்தியர்கள் aru nagappanவிஷயத்தில் மட்டும்தான் என்பது வேறு கதை) ஹிண்ட்ராப் இந்தியர்களுக்கான போராட்டக் குழு. அதனோடு உடன்பட்டுப் போனால் தங்கள் கொள்கைக்கு மாசு ஏற்படும் என்றும் அவர்கள் எண்ணியிருக்கலாம். வேதமூர்த்தியின் எழுத்து பூர்வமான ஒப்பந்தத்தைப் பாக்காதான் ஏற்காததற்கு இவையே காரணங்கள்.

 

இக்காரணங்களால் பாக்காதான் கடைசி வரை மெளனத்தை ஆயுதமாக்கி வேதமூர்த்தி பாரிசானைத் தேர்ந்தெடுப்பதற்கு வழி வகுத்தது.. வேதமூர்த்தி கத்தி மேல் நடக்க முடிவு செய்தார். மேலவை உறுப்பினர், துணையமைச்சர் என்ற பதவிகளால் வேதமுர்த்தியை  நஜிப் ‘சிறை’ வைத்தார்.

 

எட்டு மாத கால பதவி வாழ்க்கையில் வேதமூர்த்திக்கு எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை. இந்திய சமூகத்திற்காக வேதமூர்த்தி வரைந்திருந்த மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரமோ நிதியோ அவருக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து பல தடவை அவர் பிரதமரோடு பேசியும் வேதமூர்த்தியை சமாதானம் செய்யும் வார்த்தைகளையே நஜிப் பேசி வந்துள்ளார்.

 

‘ஒப்பந்தப்படிச் செயல்படாவிட்டால் பதவி விலகுவேன்’ என்று வேதமூர்த்தி பிரதமரிடம் பேசியதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியாகின. அப்படியெல்லாம் வேதமூர்த்தி  பேசவில்லை என்று இப்போது  நஜிப் கூறுவது ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற பழமொழியில் அடங்குகிறது.

 

நம்பிக்கை, நம்பிக்கை என்று தேர்தல் காலத்தில் சொல்லிவிட்டு இப்போது கழுத்தறுத்த நஜிப்புக்கு இந்தியர்களைப் பற்றிய எதுவுமே சாதாரணம்தான்.

 

ஒப்பந்தப்படி வேதமூர்த்தி செயல்படுவதற்கும் அதற்கான அதிகாரத்தை நஜிப் வழங்குவதற்கும் இருந்த தடைகள் என்ன? வேதமூர்த்தி வெளிப்படையான அறிக்கை வெளியிட்டால் முழு உண்மை தெரிய வரும். அதுவரை  ம.இ.கா.வும் பிரதமர் துறையில் ஏற்கனவே இந்தியர்களுக்கான பொறுப்பதிகாரிகளாக இருக்கும் சிலருமே இதற்குத் தடையாக இருந்திருக்க முடியும் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது. வேதமூர்த்தி இயங்கத் தொடங்கிவிட்டால் தங்களின் முக்கியத்துவம் அழிந்துவிடும் என்று அவர்கள் எண்ணுவதற்குக் காரணம் இருக்கிறது.

 

யார் இதற்குக் காரணம் என்றாலும் பிரதமரே எல்லாவற்றுக்கும் மூல காரணம். நஜிப் அல்லது நஜிப் சார்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் எந்த அளவுக்கு அதிகாரத்துவ ஆற்றல் உடையது என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட ஓர் ஒப்பந்தம் கழிவறைக் காகிதமாக உதாசீனப்படுத்தப்பட்டது மலேசிய இந்தியர்கள் அத்தனை பேருக்குமான ஒட்டுமொத்த அவமதிப்பாகும்.

 

மலேசிய வரலாற்றில் இந்தியர் அவமானப்படுவது புதுமை அல்ல, இது முதல் முறையுமல்ல. பல முறை நடந்துவிட்ட இது இனியும் நடக்கும். தேர்தலுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருப்பதால் இந்தியர்கள் குறித்து இப்போதைக்கு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.