இப்போது உண்மையச் சொல்வது யார், நஜிப்பா, வேதமூர்த்தியா?

– மு. குலசேகரன், பெப்ரவரி 19, 2014.

Najib-hindraf13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு பாரிசான் நேசனலுடன் செய்து கொண்ட புரிந்துணர்வில் கூறப்பட்டுள்ள இந்தியர்களுக்கான சமூக-பொருளாதார செயல்திட்டங்களை செயல்படுத்த இயலாமல் போனதற்காக மலேசிய ஹிண்ட்ராப் மன்றத்தின் தலைவர் வேதமூர்த்தி நேற்று இந்திய சமூகத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

கடந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு பாரிசான் நேசனலுடன் ஹிண்ட்ராப் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பார்சானுக்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை என்பது தெளிவானதால், அரசியல் மாற்றங்கள் வேண்டும் என்பதில் பேராவல் கொண்டிருந்த மலேசியர்களுக்கு அது அதிர்ச்சியையும் சினத்தையும் ஏற்படுத்தியதோடு தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாகவும் கருதினர்.

இந்திய சமூகத்தினருக்கு உதவுவதற்கான அவரது விருப்பத்தைப் பற்றி அடிக்கடி பிரதமர் நஜிப் பேசி வந்த போதிலும், அவரால் சொன்னதைச் செய்ய முடியும் அல்லது செய்வார் என்று எதிரணியைச் சார்ந்த நாங்கள் நம்பவில்லை.

ஓரங்கட்டப்பட்ட இந்திய சமூகத்தினர் அனுபவிக்கும் வேதனைகளைக் களைய வேண்டும் என்ற ஈடுபாடு பாரிசான் அரசுக்கு இருந்திருக்குமானால், இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்து வரும் அந்த அரசு அதனைச் செய்திருக்க முடியும். காலப்போக்கில் 1 kulaஹிண்ட்ராப்பும் பாரிசானால் ஏமாற்றப்படும் என்பதும் தெரிந்ததே.

நஜிப்பின் நிருவாகத்தை நம்பியதும் ஏழை இந்தியர்களுக்கு போலியான நம்பிக்கையை அளித்ததும் ஹிண்ட்ராப் இழைத்த பெரும் தவறு என்பதை காலம் நிருபித்து விட்டது.

வேதமூர்த்தி பதவி விலகப் போகிறார் என்பது குறித்து பிரதமருக்கு முன்னதாகவே தெரியப்படுத்தப்பட்டிருக்கும். இருந்தும், அவர் பதவி துறக்க வேண்டாம் என்று வேதமூர்த்திக்கு ஆலோசனை கூற முற்படவில்லை. இது வேதமூர்த்திக்கு இழைத்த அவமரியாதையாகும்.

பெப்ரவரி 10 ஆம் தேதி வேதமூர்த்தி அவரது பதவி விலகல் கடிதத்தை தாக்கல் செய்த பின்னர், வேதமூர்த்தி அவ்விவகாரம் குறித்து தம்மிடம் பேசியிருக்க வேண்டும் என்று நஜிப் கூறினார். ஆனால், தாம் பிரதமருடன் குறைந்தது 16 சந்திப்புகளை நடத்தியுள்ளதாக வேதமூர்த்தி கூறுகிறார்.

இப்போது, உண்மை பேசுவது யார், நஜிப்பா? அல்லது வேதமூர்த்தியா?

 

TAGS: