எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி பிஎன் அரசாங்கமாக இருந்தாலும் சரி பிள்ளைகளை அரசியலுக்குள் இழுக்கக் கூடாது என மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார்.
“நாம் பிள்ளைகளை அரசியல் அரங்கிற்குள் கொண்டு வரக் கூடாது என்பது என் கொள்கையாகும். எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி எவருக்கு அது பொருந்தும்,” என கோலாலம்பூரில் கருத்தரங்கில் ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர் நிருபர்களிடம் கூறினார்.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தமது புதல்வனுடைய தவறான நடத்தை எனக் கூறப்படும் விஷயத்தை மறைக்க முயலுவதாக அம்னோ ஆதரவு வலைப்பதிவாளரான ‘பாப்பாகோமோ’ தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி அவர் கருத்துரைத்தார்.
லிம்-மின் 16 வயது புதல்வர் தமது சக மாணவி ஒருவரை மானபங்கப்படுத்தினார் என்றும் மற்றொரு பள்ளிக்கூடத்துக்கு தமது புதல்வரை மாற்றியதின் மூலம் அந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்கு அந்த டிஏபி தலைமைச் செயலாளர் பெரும் பணம் கொடுத்தார் என்றும் வலைப்பதிவில் கூறப்பட்டது
“தார்மீக ரீதியில் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித் தனமான” பொய்கள் மூலம் தமது பதின்ம வயது புதல்வனுடைய வாழ்க்கையை நாசப்படுத்துவதின் மூலம் தமது அரசியல் வாழ்க்கையை முடிக்க அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள் முயலுன்றனர்,” என நேற்று லிம் கடுமையாக சாடியிருந்தார்.
தமது புதல்வன் பிஎம்ஆர் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றத்தை தொடர்ந்து தாம் வாக்குறுதி அளித்தது போல அவனை இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்றியதாக லிம் சொன்னார்.
எதிர்க்கட்சித் தலைவருடைய புதல்வனைக் குறி வைப்பது பொருத்தமானது அல்ல என்றும் சிறு பிள்ளைகளைக் குறி வைக்கக் கூடாது என்றும் ஷாரிஸாட் சொன்னார்.
பிள்ளைகளை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம் என்றும் அவர் எதிர்க்கட்சி, அரசாங்க ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் வலைப்பதிவாளர்கள் குறிப்பிட்ட ஒரு தரப்பைச் சார்ந்தவர்கள் என்றும் முத்திரை குத்தக்கூடாது என்றார் ஷாரிஸாட்.
“அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் என்ற முறையில் எனக்குக் கூட அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள் யார் எனத் தெரியாது.”
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் ஹெங் ஈ தேசிய இடைநிலைப் பள்பள்ளிக் கூடத்தில் அத்தகைய சம்பவம் ஏதும் நிகழவில்லை என அதன் தலைமை ஆசிரியர் மறுத்துள்ளார்.