உத்துசான் அத்துமீறல்! பாரிசான் மௌனம் ஏன்?

utusan– மு. குலசேகரன், பெப்ரவரி 23, 2014.

 

கடந்த வார ஞாயிறு மிங்குவன் மலேசியா நாளிதழில், மலாய் இனமும் இஸ்லாம் மதமும் மலாய் மண்ணில் அவமதிக்கப்படுகின்றன என்று அதன் துணை ஆசிரியர் அஸ்மான் அனுவார் விலாவரியாக எழுதியிருந்தார்.

 

அவர் எழுத்தில் இனவாதமும் மதச் துவேசமும் நிறைந்திருந்தது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஓர் இனத்தையே முதன்மைப்படுத்தி, அதிதீத கற்பனையுடன்  மற்ற இரண்டு இனங்களும் ஒன்று சேர்ந்து இந்த அவமதிப்பைச் செய்வதாக கூறியிருந்தார்.

 

அவருடைய கட்டுரையில் :

 

1. 56 வருடங்களுக்கு முன்பு, மலாய்க்காரர் அல்லாதாருக்கு மலாய்க்காரர்களின் பரந்த மனப்பான்மையினால்தான் குடியுரிமை கிடைத்தது. இந்த சலுகை உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாத ஒன்று.

 

2. அவர்கள் பணக்காரர்களாகி பொருளாதாரத்தையும்  அரசியல் செல்வாக்கையும்  பெற்ற பின்னர்நெருப்புடன்”  விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

 

3. மலாய்க்காரர் அல்லாதார் மலாய்க்காரர்களின் சடங்குகளையும், கலாச்சாரத்தையும் மதிக்காமல் இப்பொழுதுதேன் கூட்டிலும்கையை வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

4. மலாய்க்காரர்கள் இதுவரையில் பொறுமையைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள். அந்த பொறுமையை அவர்கள் இழந்தால் தேன் கூட்டில் கையை வைத்து தேனையும் கவர்ந்து செல்ல நினைக்கும் மலாய்க்காரர் அல்லாதாரை தேனீக்கள்  கொட்டாமல் விடாது

 

அஸ்மி சரித்திரத்தை மறந்து எழுதுகின்றார். இந்தியர்களும் சீனர்களும் வெள்ளையர்களால் இந்த நாட்டை வளப்படுத்தக்utusan கொண்டுவரப்பட்டனர்  என்பது வரலாற்று உண்மை.

 

காட்டை அழித்து ரப்பர் நட்டது, தார் சாலை போட்டது, தண்டவாளம் போட்டு, நோயிலும்  கடும் வெயிலிலும் பாடுபட்டு நாட்டை வளமாக்கியவர்கள் இந்தியர்களும் சீனர்களும்தான் என்பதும் வரலாற்று உண்மை.

 

1958 ஆம் ஆண்டில், மலாயாவின் தேசிய வருமானத்தில் 68 விழுக்காடு தோட்டங்களிலிருந்தும், 30 விழுக்காடு ஈயச் சுரங்கங்களிலிருந்தும், மற்றவர்களிடமிருந்து வந்தது வெறும் 2 விழுக்காடுதான் என்பதும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

 

மலாயாவில் தோட்டம் என்ற அடிப்படையில் முதல் ரப்பர் தோட்டத்தை மலாக்காவில் உருவாக்கியவர் டான் என்ற சீனர். சீனர்களின் முதலீட்டிற்கு அவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர்கள் செட்டியார்கள் என்ற இந்தியர்கள் என்பதும் மூடிமறைக்க முடியாத வரலாற்று உண்மை.

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, செட்டியாரிடமிருந்து வாங்கிய 8,000 வெள்ளியை ஜொகூர் மாநில அரசு கட்டியது என்பது நமக்கெல்லாம் தெரிந்த உண்மை!

 

kulaஇப்படி தங்களுடைய உழைப்பைக் கொட்டி காட்டை அழித்து மலாயாவை நாடாக்கி, பிரிட்டிஷ் பேரரசை பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றியது இந்தியர்களும் சீனர்களும்தான் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு கைமாறாக பிரிட்டிஷ் அரசும் அன்றைய தலைவர்களும் செய்து கொண்ட ஏற்பாட்டின் வழி  கிடைத்ததுதான் மலாயாவின் சுதந்திரமும், மலாய்க்கார் அல்லாதாரின் குடியுரிமையும்.

 

ஆகவே குடியுரிமையும்  சுதந்திரமும் ஒன்றை ஒன்று  சார்ந்தவை. இது மலாய்க்காரர்களின் பரந்த மனபான்மையால் கிடைத்தது  என்று சொல்வது வரலாற்றை மாற்றி எழுதிக் காட்ட விரும்பும் அறிவிலிகளின் சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.

 

உழைக்க வந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை  கொடுத்துவிட்டு மலாய்க்காரர்களுக்கு சிறப்புச் சலுகை கொடுக்காமல் இந்நாட்டிற்கு பிரிட்டிஷார் சுதந்திரம் வழங்கியிருப்பார்களேயானால்,  அஸ்மின் போன்றவர்கள் இன்னும் இருந்த இடத்திலேயும் நிலையிலும்தான் இருந்திருப்பார்கள். இதனால்தான் வெள்ளையனும் அன்றைய தலைவர்களும் மாலாய்க்காரர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை சிறப்புச் சலுகைகள் தந்து மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க ஆவன செய்தார்கள்.

 

ஆகவே, குடியுரிமை என்பது பரந்த மனப்பான்மையால் கொடுக்கப்பட்ட ஒன்றன்று. மாறாக பண்ட மாற்று வியாபாரம் போல் ஒன்றைவிட்டுக் கொடுத்து மற்றொன்றை பெறுதல் ஆகும்.

 

மலாய்க்காரர்கள், இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் குடியுரிமை வழங்க இணங்கினார்கள் என்றால் அதே  இந்தியர்களும் சீனர்களும் மலாய்க்காரர்கள் சில காலம் சிறப்பு  சலுகையோடு வாழ விட்டுக் கொடுத்தார்கள்  என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

 

அரசியல் சாசனத்தில் ஒரு மலாய்க்காரர்தான் பிரதமர் ஆகலாம் என்று கூறப்படாவிட்டாலும், இந்த நாடு மலாய்க்காரர்கள் அதிகமாக  வாழும் நாடு என்பதால், ஒரு மலாய்க்கார்தான் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை மாலய்க்காரர் அல்லாதவர்கள் எப்போதே ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அதே போல மலேசியா ஒரு சமய சார்பற்ற நாடாக இருந்த போதும் இஸ்லாம் இந்நாட்டின் பெரும்பான்மை இனத்தின் மதம் என்பதால் அது அதிகாரபூர்வமான மதம் என்பதை பெரும்பாலான மலாய்க்காரர்  அல்லாதோர் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

 

அமைதியாக போய்க்கொண்டிருக்கும் இந்நாட்டில் குழப்பதை விளைவிப்பது உத்துசான் போன்ற பத்திரிகைகளும் அதன் பின்னனியில் செயல்படும் அம்னோவும்தான் என்பது தெள்ளத் தெளிவு.

 

எப்படியாவது  நாட்டில் குழப்பத்தை விளைவித்து அதன் வழியாக ஓர் இன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே அம்னோ முயற்சி செய்து வருகிறது.

 

அஸ்மின் தன்னுடைய எழுத்தில் எப்படி, எப்போது மலாய்க்காரர் அல்லாதார் மலாய்க்காரர்களின் சடங்கையும் கலாச்சாரத்தையும் அவமதித்தனர் என்று ஆதரத்தோடு எடுத்துக்காட்டவில்லை. மாறாக உத்துசான்  போன்ற இனவாத பத்திரிகையும், பெர்காசா போன்ற மிதவாத இயக்கமும் மலாய்க்காரர் அல்லாதாரின் உணர்வை பாதிக்கும் அளவிற்கு எவ்வளவோ செய்திருக்கின்றனர். உதாரணத்திற்கு:

 

பினாங்கு முதல்வருக்கு, மலம் வடிவில் கேக் ஒன்றை அமைத்து கொடுத்தது அம்னோவின் ஆட்கள்தான்.

 

இந்தியர்களின் உணர்வினைத் தூண்டும் அளவிற்கு  மாட்டை வெட்டி அதன் தலையை எடுத்துக் கொண்டு தெருவில்  வலம் வந்ததும் அம்னோவின் இனவாதிகள்தான்.

 

தேசியப்பள்ளியில் இந்திய மாணவர்களை கழிவறைக்குப் பக்கத்தில்  உட்கார வைத்து  சிற்றுண்டி  சாப்பிடச் சொன்னதும் ஓர் அம்னோ தலைமை ஆசிரியர்தான்.

 

தெரெசா கொக்கை  அறைந்தால் சன்மானம் வழங்கப்படும் என்று சொன்னதும் இந்த அம்னோவின் வேலைதான்.

 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு  வைத்தாற்போல், துணைக் கல்வி அமைச்சர் கமலாநாதனுக்கு  குத்து விட்டதும் அம்னோவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர்தான்.

 

சமீபத்தில்கூட, பத்துமலை தைப்பூசத்தின் போது மலையேறுபவர்கள் அனைவரும்சைதான்கள்” என்று  ஒரு மலாய்க்காரர் தனது  முக நூலில் எழுதியிருந்தார்.

 

இன்னும் எவ்வளவோ !

 

ஆனால், அஸ்மின் மட்டும் இதெல்லாம் நடவாதது  போலாவும், மலாய்க்காரர் அல்லாதவர்கள்தான் இஸ்லாத்தையையும், மலாய் அரசையும் சிறுமைப்படுத்துவதாக ஆதாரமில்லாமல் புலம்பித் தள்ளியிருக்கிறார்.

 

இவரின் எழுத்து நடை, இவர் கையாண்டிருக்கும் மொழியின் வன்மை, இந்த நாட்டின் அமைதியை குலைப்பதற்கென்றே யாரோ சொல்லிக்கொடுத்தது போல் உள்ளது.

 

இதையெல்லாம் கண்டும் காணாமல் பிரதமர் நஜிப் இருப்பதால், இவருக்கும் இதில் உடன்பாடு உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

இது போன்ற எழுத்துகளால் நாட்டில் ஒற்றுமை  குலைந்து குழப்பம் ஏற்படுமேயானால், வெளிநாட்டு முதலீட்டை அது பெரிதும் kit siangபாதிக்கும். அதனால் பாதிக்கப்படப்போவது மலாய்க்காரர் அல்லாதார் மட்டுமின்றி மலாய்க்காரர்களும் பாதிக்கப்படுவர் என்பதை அஸ்மின் அனுவார் உணருகிறாரா?

 

பாரிசானில்  உள்ள உறுப்புக் கட்சிகள்  உடனடியாக பிரதமரை அணுகி, உத்துசான் பத்திரிக்கைக்கு சரியான எச்சரிக்கை கொடுக்க அழுத்தம் தர வேண்டும். ஏற்கனவே  ஜனநாயகச் செயல் கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் தனது கடுமையான கண்டணத்தை உத்துசானுக்கு தெரிவித்துவிட்டார். அவ்வாறே, பாஸ் கட்சியின் மத்திய செயலவை  உறுப்பினராகிய காலிட் சாமாடும் உத்துசானை சாடியுள்ளார்.

 

..கா தலைவர்கள் யாரும்   இதுவரை இதற்குக் கண்டணம் தெரிவிக்காதது ஏன்?

 

 

TAGS: