அசீஸ் பேரி இடைநீக்கம் (விரிவான செய்தி)

நேற்று, சட்ட விரிவுரையாளர் அப்துல் அஜிஸ் பேரி-க்குக் காரணம் கோரி கடிதம் அனுப்பிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம்(யுஐயு) இன்று அவரை இடைநீக்கம் செய்தது.

பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை வழங்கிய அறிவிக்கையில் இந்த இடைநீக்க உத்தரவு அடங்கியிருப்பதாக மலேசியாகினி அறிய வருகிறது.

முழுச் சம்பளத்துடன் அவர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடைநீக்கம் எவ்வளவு காலத்துக்கு என்பது குறிப்பிடப்படவில்லை.

அவரிடமுள்ள பல்கலைக்கழக நுழைவு அட்டையை ஒப்படைத்துவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது எனவே, அவர் இனிமேல் பல்கலைக்கழகத்தின் கோம்பாக் வளாகத்துக்குள் செல்ல அனுமதி இல்லை என்று தெரிகிறது.

22 ஆண்டுக்காலம் யுஐஏ-இல் பணியாற்றிய அசீஸ்  இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் பட்டப் படிப்பும் முனைவர் படிப்பும் பயிலும் சுமார் 100 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அசீசின் கருத்துரைகள் “பல்கலைக்கழக நலனுக்கு முரணாக அமைந்திருப்பதாக” அவருக்குக் கொடுக்கப்பட்ட காரணம் கோரும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அக்கடிதத்துக்கு அவர் அக்டோபர் 25-க்குள் பதில் அளித்திட வேண்டும்.

மேல்விவரம் பெற மலேசியாகினி யுஐஏ நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள முயன்றது, முடியவில்லை.

ஆனால், இன்றைய பெரித்தா ஹரியானில் ,யுஐஏ தலைவர் ஸலுஹா கமருடின் நேற்று காரணம்-கோரும் கடிதம்  அசீசுக்குக் கொடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று அசீசிடம்  போலீசாரும் விசாரணை நடத்தினர். டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் சிலாங்கூர் இஸ்லாமிய சமயவிவகாரத்துறை(ஜயிஸ்) நடத்திய அதிரடிச் சோதனை தொடர்பில் சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட அறிக்கைமீது  மலேசியாகினி செய்தித்தளத்தில் அவர் தெரிவித்த கருத்துகளுக்காக அவர் விசாரிக்கப்பட்டார்..

மலேசியாகினி செய்தித்தளத்தில் வெளியிடப்பட்ட கருத்துகளில் தலையிடும் உரிமை சுல்தானுக்கு உண்டு என்று கூறிய அசீஸ், தலையீடு இஸ்லாத்துக்கு ஏற்புடையதாக இருத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அசீசை திங்கள் கிழமை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும்(எம்சிஎம்சி) விசாரணை செய்தது.

அசீஸ், தம்மைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக சுல்தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்றும் ஆட்சியாளர்களை இழிவுப்படுத்துவதும் ஆட்சியாளர் அமைப்பு தேவையில்லை என்று கூறுவதும்தான் தப்பு என்றும் கூறினார்.

அசீசின் இடைநீக்கம் பற்றி செய்தி வெளியான சில மணி நேரத்தில் பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின், யுஐஏ முன்னாள் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.நாளை  வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் சுல்தான் ஹாஜி அஹமட் ஷா பள்ளிவாசலில்  ஒன்றுகூடி அவர்கள் சட்ட விரிவிரையாளரை இடைநீக்கம் செய்யும் “ஒருதலைப்பட்சமான”  முடிவைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

யுஐஏ-இல் படித்து இப்போது வழக்குரைஞராக உள்ள ஷம்சுல், அசீசுக்கு ஆதரவுகாட்ட அந்தக் கண்டனக்கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

இதனிடையே, ஃபேஸ்புக்கில் இன்று காலை உருவாக்கப்பட்ட Kami Bantah Penggantungan Dr. Aziz Bari (டாக்டர் பேரியின் இடைநீக்கத்தைக் கண்டிக்கிறோம்) பக்கத்தில் 330 பேருக்கு மேற்பட்டோர் அசீசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.