பினாங்கு வெற்றிக்காக லிம்-மிற்கு புளும்பெர்க் புகழாரம் சூட்டுகிறது

பினாங்கு மாநிலம் பின்பற்றுகின்ற வெளிப்படையான வர்த்தக சூழ்நிலைக்கும் நாட்டை ஆளும் பாரிசான் நேசனல் பின்பற்றுகின்ற மலாய்க்காரர்களுக்கு ஆதரவான கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை குறிப்பிட்டுள்ள புளும்பெர்க் நிதிச் செய்தி நிறுவனம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு புகழ் மாலை சூட்டியுள்ளது.

அந்தக் கொள்கைகள் போட்டி ஆற்றலைக் குறைப்பதாக உலகப் பொருளகம் கூறுகிறது என நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட புளும்பெர்க் தெரிவித்தது.

” இனவாதச் சட்டத்தினால் மலேசியாவுக்குப் பேரிழப்பு அம்பலமாகிறது’ என்னும் தலைப்பிலான கட்டுரையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

என்றாலும் அனைத்துலக நிறுவனங்களுக்குக் கவர்ச்சிகரமான இடமாக பினாங்கை வைத்திருப்பதில் லிம் வெற்றி கண்டுள்ளதாக அது குறிப்பிட்டது.

ஆளும் கூட்டணி அதிகமான இடங்களை வென்றுள்ள ஜோகூர், சரவாக் போன்ற மாநிலங்களுக்கு கூட்டரசு ஆதரவை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழங்கியுள்ள போதிலும் லிம் அந்த வெற்றியை அடைந்துள்ளார்.

நாட்டில் ஒரே ஒரு சீன வம்சாவளி மாநிலத் தலைவர் 50 வயதான லிம், பன்னாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் என வரும் போது லிம் துரிதமாக செயல்படக் கூடியவர் என்றும் புளும்பெர்க் வருணித்தது.

“கோலாலம்பூருக்கு அருகில் 1990ம் ஆண்டுகளில் பல்லூடக பெருவழித் திட்டத்தை மகாதீர் முகமட் தொடங்கிய காலம் தொட்டு ஒவ்வொரு மலேசியப் பிரதமரும் முயற்சி செய்ததை பினாங்கு சாதிப்பதற்கு லிம் வெகு வேகமாக செயல்பட்டுள்ளார்,” என புளும்பெர்க் குறிப்பிட்டது.

“நாம் தூங்குகிறோம்”

2008ம் ஆண்டு உள்ளூர் விமான நிலையம் ஒன்றில் நேசனல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் கார்ப்பரேஷனின் ( National Instruments Corp ) இரண்டு நிர்வாகிகளை எதிர்ப்பாராத விதமாக சந்தித்த பின்னர் லிம், பினாங்கை நாட்டின் பொருளாதார ரீதியில் மிகப் பெரிய வெற்றி அடைந்த மாநிலமாக மாற்றினார்.

அந்த மாநிலத்தில் ஆய்வு, தயாரிப்பு மையத்தை அந்த நிர்வாகிகளை அமைக்கச் செய்வதில் வெற்றி பெற்றார்.

அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நிய தயாரிப்பு முதலீடுகளுக்கான மலேசியாவின் தலையாய இலக்காக பினாங்கு மாறியது.

“அந்த ஒப்பந்தம் வெகு வேகமாக முடிக்கப்பட்டது”, என ஆஸ்டின் நிறுவனத்தின் உள்ளூர் பிரிவின் ஒர் இயக்குநரான யூசின் சியோங் கூறினார்.

டெக்சாஸைத் தளமாகக் கொண்ட அந்த நிறுவனம் தொழிலியல் சோதனை, தானியங்கி முறைகளுக்கான சாதனங்களைத் தயாரிக்கிறது.

“இனவாத அடிப்படையிலிருந்து விலகி நல்ல ஆளுமையுடன் இருந்து  நீதியையும் நேர்மையையும் முக்கியமான பண்புகளாகக் கொண்டிருந்தால் மலேசியா முன்னேறும் என்பதற்கு பினாங்கு எடுத்துக்காட்டாகத் திகழும் வாய்ப்பு கிட்டியுள்ளது,” என சிங்கப்பூரில் தென் கிழக்காசிய ஆய்வியல் கழகத்தில் பணியாற்றும் ஊய் கீ பெங் கூறினார்.

“நாங்கள் உறங்கிக் கொண்டிருந்தோம்,” என பினாங்கில் பிறந்தவருமான ஊய் சொன்னார். அவர் “மாறுதல் காலம்: மகாதீருக்கு பின்னர் மலேசியா” என்னும் தலைப்பிலான புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார்.

அரசாங்க வேலைகள், குத்தகைகள், கல்வி, குறைந்த விலை வீடுகள் ஆகியவற்றில் பூமிபுத்ராக்கள் என அழைக்கப்படும் மலாய்க்காரர்களுக்கும் சில பூர்வகுடி மக்களுக்கும் சலுகை அளிக்கும் கொள்கையால் முதலீடுகளைக் கவருவதற்கு மலேசியா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஊய் சொன்னார்.

1997-98 ஆசிய நிதி நெருக்கடிக்கு முன்னர் பொருளாதாரம் ஏற்றமாக இருந்த போது அந்தக் கொள்கையின் தாக்கம் அவ்வளவாக உணரப்படவில்லை என அவர் புளும்பெர்க்-கிடம் கூறினார்.

ஆனால் வளர்ச்சி மந்தமடைந்த போது இன அடிப்படையிலான திட்டங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின என்றும் ஊய் குறிப்பிட்டார்.

2011ம் ஆண்டு முதல் ஏழு மாதங்களில் பினாங்கிற்கு 3.6 பில்லியன் ரிங்கிட் பெறும் அந்நிய முதலீடுகள் கிடைத்தன. அதே வேளையில் சிலாங்கூருக்கு 3.4 பில்லியன் ரிங்கிட் கிடைத்தது.

“பினாங்கின் பொருளாதார வெற்றி, தேசிய முன்னணிக்கு மாற்றாக பக்காத்தான் ராக்யாட் திகழ முடியும் என்னும் கருத்துக்கு ஊக்கமூட்டக் கூடும்,” எனவும் புளும்பெர்க் குறிப்பிட்டது.

அதனை ஒப்புக் கொண்ட அரசியல் ஆய்வாளரான ஒங் கியான் மிங், “எல்லாம் முதலமைச்சருடைய பணித் திறனைப் பொறுத்துள்ளது,” என்றார்.

நஜிப் தமது பொருளாதார உருமாற்றத் திட்டத்தின் கீழ் ஜோகூருக்கு தனியார் துறை வளர்ச்சித் திட்டங்களுக்கு 65.8 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய வேளையில் பினாங்கிற்கு 375 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே ஒதுக்கியுள்ளார்.

தேவைகள் அடிப்படையில் முதலீடுகள்

ஆனால் அதனை தற்காத்துப் பேசிய நஜிப் பேச்சாளரான தெங்கு சரிபுதின் தெங்கு அகமட், “முதலீட்டு முடிவுகள் தேவை அடிப்படையில் எடுக்கப்படுவதாகவும் அரசியல் அடிப்படையில் அல்ல” என்றும் கூறினார்.

“கடந்த ஆண்டு பினாங்கில் ஒரு பில்லியன் ரிங்கிட் பெறும் கூட்டரசு நிதி முதலீடு செய்யப்பட்டதாக அவர் சொன்னார். பொருளாதார முன்னேற்றத்துக்கு நாங்கள் எல்லா வழிகளிலும் உதவி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே மாநில அரசாங்கத்துக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள், பினாங்கு முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கக் கூடாது என லிம், புளும்பெர்க்-கிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“நமக்கு அரசியல் வேறுபாடுகள் இருக்கலாம். நாங்கள் தொழில் ரீதியாகவும் இணக்கமாகவும் செயல்படுகிறோம். பினாங்கு தோல்வி அடைந்தால் மலேசியாவும் தோல்வி அடையும்.”

அந்தச் சொற்றொடரை 2008ம் ஆண்டு அந்த மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து லிம் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.