போராட்டத்திற்கு ஒரு ‘தங்கம்’ – இராகவன் கருப்பையா
அடுத்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கும். ‘சுக்மா’ எனப்படும் மலேசிய விளையாட்டுகளில் நமது பாரம்பரிய விளையாட்டான ‘சிலம்பம்’ இடம்பெறும் எனும் செய்தியானது, நமது போராட்டத்திற்குக் கிடைத்த ‘தங்கப்பதக்கம்’ என்றே சொல்ல வேண்டும்.
‘சுக்மா’ போட்டிகளில் இம்முறை சிலம்பத்திற்கு இடமில்லை என கடந்த வாரம் வெளியானத் தகவல் நம் சமூகத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி கொஞ்சம் மன வேதனைக்கும் வித்திட்டது.
ஏனென்றால் இந்நாட்டில் நமது அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் போராடி போராடி அலுத்துப் போயிருக்கும் நாம் இதற்குக் கூட போராட வேண்டியிருக்கிறதே எனும் யதார்த்தம் வேதனையான ஒரு விஷயமாகும்.
ஆனால் இதற்கு யார் காரணம், ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை கண்டறியாமல், நம் சமூகத்தைச் சார்ந்த பலர் பிரதமர் அன்வார் உள்பட பல்வேறுத் தரப்பினரை சகட்டு மேனிக்கும் விளாசியது அதைவிட வேதனை.
கடந்த சில தினங்களாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும்தான் இந்த கூத்து உணர்ச்சி பொங்க தலைவிரித்தாடியது.
எனினும் பொது மக்களிலிருந்து அரசியல்வாதிகள் வரையில் பல்வேறுத் தரப்பினர் கொடுத்தத் தொடர் அழுத்தத்தின் பயனாகத்தான் சிலம்பத்திற்கு மீண்டும் அங்கீகாரம் கிடைத்தது என்பதையும் நாம் மறுக்க முடியாது.
எந்தெந்த விளையாட்டுகளை சேர்த்துக் கொள்வது, எவற்றை நீக்குவது போன்ற முடிவுகளை, அப்போட்டிகளை ஏற்று நடத்தும் மாநிலம்தான் முடிவு செய்யும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ சமாதானம் கூறினார்.
இருந்த போதிலும், இம்முறை 4 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் தலைமையில் நடந்த ‘சுக்மா’ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என அவரே செய்த அறிவிப்பு நமக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஒரு விளையாட்டை புதிதாக சேர்ப்பதற்கு முடிவெடுக்கும் இக்குழு சிலம்பம் நீக்கப்படுவதை ஏன் தடுக்கவில்லை எனும் கேள்வி எழுவதிலும் நியாயம் உள்ளது.
ஆக, ‘தீர்ப்பை மாற்றி எழுத’ தன்னிடம் அதிகாரம் இருக்கிற போதிலும் தொடக்கத்தில் இவ்விவகாரத்தில் இருந்து ஏன் அவர் நழுவ முனைந்தார் என்றுதான் நமக்கு புரியவில்லை.
இதற்கிடையே சிலம்பத்தை நீக்குவதற்கான அதிரடி முடிவுக்குப் பின்னணியில் தேசிய விளையாட்டு மன்றம் உள்ளது எனும் விவரம் நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மலேசிய சிலம்பக் கழகம் அண்மைய காலமாக தலைமைத்துவ போராட்டத்தில் சிக்கி, திக்கற்ற நிலையில் உழன்றுக் கொண்டிருக்கிறது.
அதன் உள்பூசலுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என அக்கழகத்தின் தோற்றுனர்களில் ஒருவரும் அதன் தொடக்ககால தலைமைச் செயலாளருமான மாசிலாமணி கூறினார்.
அது மட்டுமின்றி அக்கழகம் எம்.ஏ.சி.சி. எனும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைப் பட்டியலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய விளையாட்டு மன்றம் செய்த முடிவுக்கு இத்தகைய குளறுபடிகள்தான் காரணம் என்று விவரித்த அவர், அக்கழகம்தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் ‘ஒற்றுமையின்மை எனும் தொற்று நோய்’தான் இத்தகைய அவலங்களுக்கு வித்திடுகின்றது என மாஜு ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான மாசிலாமணி கூறினார்.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்திற்கு நம் நாட்டில் நீண்டதொரு வரலாறு உள்ளது எனும் விவரம் தற்போதைய தலைமுறையினரில் நிறைய பேர்களுக்குத் தெரியாது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுபினராக இருந்த வி.எல்.காந்தன் மற்றும் மாசிலாமணி போன்ற சிலர் இவ்விளையாட்டை முன்னிலைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர்.
அதற்கு முன் இக்கலை பல்லாண்டுகளாக ஆங்காங்கே நகர்ப்புறங்களுக்கு வெளியே உள்ள கிராமங்களில் மிகச்சிறிய அளவில் நம் சமூகத்தினரால் ஒரு பொழுதுபோக்காக விளையாடப்பட்டது.
அரசாங்க பதிவேட்டில் இதனை இந்தியர்களின் பிரதான பாரம்பரிய விளையாட்டாக பதிவு பெறச் செய்யும் பொருட்டு 1975ஆம் ஆண்டு வாக்கில் காந்தன் தனது மூத்த சகோதரரான அப்போதைய ம.இ.கா. தலைவர் மாணிக்கவாசகத்திடம் இவ்விவகாரத்தைக் கொண்டு சென்றார்.
உடனே நடவடிக்கையில் இறங்கிய மாணிக்கவாசகம் இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் என்பது போற்றப்பட வேண்டிய ஒரு வரலாறு.
ம. இ.கா.வின் அப்போதைய துணைத் தலைவர் ஆதி நாகப்பன் முன் மொழிய, அக்கட்சியின் உதவித் தலைவர் சாமிவேலு வழிமொழிந்ததைத் தொடர்ந்து சிலம்பம் அதிகாரப்பூர்மாக அங்கீகாரம் கண்டது.
அதன் பிறகு மலேசிய சிலம்பக் கழகம் அமையப்பெற்று, ஒரு வழக்கறிஞரான காந்தனே அதற்கான சட்ட திட்டங்களையும் வரைந்து கழகத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். அதன் தலைமைச் செயலாளராக மாசிலாமணி நியமனம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 1985ஆம் ஆண்டு வாக்கில் இவ்விளையாட்டு தமிழகத்தில் பிரசித்திப் பெறுவதற்கும் மலேசிய சிலம்பக் கழகம்தான் முக்கிய பங்காற்றியுள்ளது. அது வரையில் கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தக் கலை ஓரளவு தெரிந்திருக்கிறது.
தமிழகத்தோடு நின்றுவிடாமல், மலேசிய சிலம்பக் கழகம் தாய்லாந்து, ஃபிலிப்பீன்ஸ், மியன்மார், கம்போடியா போன்ற நாடுகளுக்கும் இவ்விளையாட்டைக் கொண்டுச் சென்றது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒரு விஷயமாகும்.
பிறகு 2002ஆம் ஆண்டில் அக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் ஞானபாஸ்கரன் இவ்விளையாட்டை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றார்.
தமது அயராத முயற்சியால் 6 ஆண்டுகள் கழித்து சிலம்பத்தை ‘சுக்மா’வில் இணையச் செய்த பெருமை ஞானபாஸ்கரனையேச் சாரம். அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2009ஆம் ஆண்டில் அக்கழகத்தின் தலைமைத்தவம் மாறியது. மற்றவையெல்லாம் வரலாறு.
























