இராகவன் கருப்பையா – நம் நாட்டிலுள்ள வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் இம்மாதம் நிகழ்ந்துள்ள 3 கொடூர வன்முறைச் சம்பவங்கள் நம்மை மிகுந்த சோகத்தில் ஆழ்த்துவதோடு ஓரளவு கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
இம்மாதம் 2ஆம் தேதி நெகிரி செம்பிலான், செரம்பானில் உள்ள ஒரு தொடக்க நிலை பள்ளிக் கூடத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக மரணமடைந்தான்.
பள்ளியின் கழிப்பறையில் சுயநினைவின்றிக் கிடந்த அந்த 4ஆம் வகுப்பு மாணவன் பிறகு மருத்துவமனையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அச்சிறுவனின் கழுத்து இறுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததால் இச்சம்பவத்தை, பகடிவதை உள்பட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் ஆராய்ந்தனர். விசாரணை அறிக்கை தற்போது அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் உள்ளது.
இந்நிலையில், அதே தினத்தன்று மலாக்கா, அலோர்காஜாவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் 3ஆம் படிவ மாணவி ஒருவரை இரு 5ஆம் படிவ மாணவர்கள் கற்பழித்துள்ளனர்.
நாடு தழுவிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஈனச் செயலை மேலும் இரு மாணவர்கள் வீடியோ பதிவு செய்து மற்றவர்களிடம் பகிர்ந்தது அதனிலும் கொடுமை.
சம்பந்தப்பட்ட அந்நால்வரும் உடனே கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் தடுப்புக்காவலில் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதியன்று சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் 4ஆம் படிவ மாணவி ஒருவர் மிகக் கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்டார்.
அதன் தொடர்பில் அதே பள்ளியைச் சேர்ந்த 2ஆம் படிவ மாணவர் ஒருவர் தற்போது தடுப்புக் காவலில் உள்ளார்.
அலோர்காஜா சம்பவத்தில் தொடர்புடைய 4 மாணவர்களின் நீண்டகால நலன் கருதி, எதிவரும் எஸ்.பி.எம். தேர்வில் பங்கேற்பதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்த கல்வியமைச்சர் ஃபட்லினா, கடுமையானக் கண்டனத்திற்குள்ளானார்.
கேவலமான ஒரு குற்றச் செயலை மிகத் துணிச்சலாக அரங்கேற்றியுள்ள மாணவர்களின் நலனைப் பேணுவதில் முனைப்புக் காட்டும் அரசாங்கத்தின் போக்கினால் வெகுசன மக்கள் சினமடைந்துள்ளனர்.
மேற்கத்திய கலாச்சாரம்தான் இதற்கெல்லாம் காரணம் என பிரதமர் அன்வார் சொன்னக் கருத்தும் கூட ஏற்புடையதாக இல்லை.
ஏனெனில் மேற்கத்திய கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிற போதிலும் குடும்பக் கலாச்சாரம் சரியாக இருந்தால் பிள்ளைகள் தரிகெட்டுப் போகாமல் தடுக்கலாம்.
பிள்ளைகளுக்கான ஒழுக்கத்தை முதலில் பெற்றோர்களும் குடும்பத்தினரும்தான் பயிற்றுவிக்க வேண்டும், பேணி வளர்க்க வேண்டும். அதன் பிறகுதான் ஆசிரியர்களின் பங்கும் கடமையும்.
கை தொலைபேசி மற்றும் வீடியோ விளையாட்டுகளில் எண்ணற்றப் பிள்ளைகள் எந்த அளவுக்கு மூழ்கிக் கிடக்கின்றனர் என்பதை நாம் கண்கூடாகவே பார்க்கின்றோம். இதற்கு யார் காரணம்?
கத்தி, ஈட்டி, வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் கொடூரக் கொலைகளை சர்வ சாதாரணமாக சித்தரிக்கும் விளையாட்டுகள் அந்தத் தளங்களில் நிறையவே உள்ளன.
அதிகமான இல்லங்களில் தற்போதெல்லாம் பெற்றோர்கள் ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கமாக தொலைபேசிகளிலும் கணினிகளிலும் தனித்தனியாக சமூக வலைத் தளங்களில் மணிக்கணக்கில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
இதனால் இயற்கையாக இருக்க வேண்டிய குடும்ப பிணைப்பு வெகுவாக பாதிக்கப்பட்டு விரிசல்கள்தான் அதிகரித்துக் கொண்டே போகிறது. பிள்ளைகள் மீதான கட்டுப்பாட்டையும் பெற்றோர்கள் சன்னம் சன்னமாக இழந்துவிடுகின்றனர்.
ஆக, தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு புறமிருக்க, அடிப்படையில் பெற்றோரியல் தொடர்பான அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிள்ளைகளின் நலன் மீது அதிக கவனம் செலுத்தினால் இது போன்ற குற்றச் செயல்கள் மேலும் நிகழாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.
























