மஇகாவின் சிக்கல்: பாரிசானுடனான நம்பிக்கை மற்றும் எதிர்க்கட்சியின் மறுசீரமைப்பு

ப. இராமசாமி, தலைவர், உரிமை.- பாஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்ற மஇகாவின் இளைஞர் பிரிவின் விளக்கம் — அழைப்பிதழ் ஒரு நாள் முன்புதான் வந்தது மேலும் அந்தக் கூட்டம் கெடாவில் நடைபெற்றது, கோலாலம்பூரிலிருந்து சில மணி நேர பயணம் என்பதால் கலந்துகொள்ளவில்லை.இந்தக் காரணம் பெரிதாக நம்பத்தகுந்ததாகத் தோன்றவில்லை

முன்னதாக பெர்சாத்துவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதற்காக அம்னோவால் எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மஇகா தயங்கியிருக்கக் கூடும். உண்மையிலேயே பாரிசானை விட்டு விலக தீர்மானித்திருந்தால், பாஸின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது தான் இயல்பான நடவடிக்கை. ஏனெனில், பெர்சாத்துவின் கூட்டத்தில் ஏற்கனவே பிரதிநிதியை அனுப்பியிருந்தது.

நியாயமாகச் சொன்னால், மஇகா கடினமான சூழ்நிலையில் உள்ளது. பாரிசானுடன் கொண்டுள்ள நீண்ட வரலாற்றுச் சம்பந்தங்கள் கட்சியை விட்டு விலகுவதைக் கடினமாக்குகின்றன. ஆனால், கூட்டணிக்குள் மரியாதை மற்றும் கண்ணியம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், ம இகாவுக்கு உண்மையில் என்ன காரணம் மீதமிருக்கும்?

பெர்சாத்துவின் நிகழ்ச்சி மற்றும் பாஸ் அழைப்புக்கிடையில் அம்னோவும் மஇகா  தனிப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தியதா, அல்லது ஏதேனும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. அதேசமயம், அன்வார் இப்ராஹீம் தலைமையிலான மதானி அரசாங்கத்தின் பழிவாங்கும் அபாயங்களையும் மஇகா கணக்கிட்டு இருக்கலாம். அரசாங்க அமைப்புகள், குறிப்பாக எம்.ஏ.சி.சி., எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து, நீண்டகால அல்லது அதிரடி விசாரணைகள் மூலம் களங்கப்படுத்தும் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன; ஆனால் நீதியை வழங்குவதற்காக அல்ல.

இதற்கிடையில், சபா சுரங்கச் சர்ச்சை போன்ற முக்கியமான ஊழல் வழக்குகள் மெதுவாகவே நகர்கின்றன, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் இடைவிடாத கண்காணிப்புக்கு உள்ளாகின்றனர். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரும் கூட விட்டுவைக்கப்படவில்லை. எந்த முன்னாள் அரசாங்கமும் அன்வாரின் “சீர்திருத்தவாத” ஆட்சியைப் போல எதிர்க்கட்சியினரையும் ஊடகத்தையும் இவ்வளவு கடுமையாகத் துரத்தியதில்லை.

இறுதியாக,  மஇகா தலைவர்கள் துணிவும் தீர்மானமும் காட்ட வேண்டும். அவர்கள் உண்மையிலேயே எதிர்க்கட்சியில் தங்களை இணைக்க விரும்பினால், தாமதமும் தளர்வும் பயனளிக்காது.