அழகிய தமிழ் மொழியை அலைக்கழிக்க விடலாமா?

இராகவன் கருப்பையா- தமிழ் மொழிக்கும் அதன் இலக்கியத்திற்கும், பாரம்பரியத்திற்கும் ஈடு இணையற்ற வரலாறும் அதற்கேற்ற விசேஷமும் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

ஆனால் சில ஆங்கில எழுத்துக்களின் ஊடுருவலால் அதன் உச்சரிப்பில் மாசுபடிந்து, குறிப்பிட்ட சில வார்த்தைகள் சீர்குலைந்து அல்லல்படுவது வேதனையான ஒன்றாகும்.

இந்த அவலத்திற்கு மாற்று இனத்தவரோ வேறு மூன்றாம் தரப்பினரோ காரணமில்லை. மாறாக தமிழ் மொழியை ஆங்கிலத்தில் எழுத முற்படும் நாம்தான் அதற்கு மூலக்காரணம் என்பது அதைவிட வேதனையான விஷயமாகும்.

குறிப்பாக, ‘ல,’ ‘ள,’ ‘ழ,’ எனும் 3 தமிழ் எழுத்துக்களையும் எடுத்துக் கொள்வோம். இம்மூன்று எழுத்துக்களும் வெவேறு விதமாக உச்சரிக்கப்பட வேண்டும் எனும் போதிலும் அவற்றை ‘ரோமானிய’ப் படுத்தப்படும்(Romanise) போதுதான் குளறுபடிகள் எழுகின்றன.

‘ல,’ ‘ள,’ ஆகிய 2 எழுத்துக்களையும் ‘ரோமானிய’ப்படுத்தி எழுதும் போது, ஆங்கிலத்தில் ‘L’ எனும் எழுத்தைதான் சரிசமமாக நாம் பயன்படுத்துகிறோம்.

உதாரணத்திற்கு கபிலன்(Kabilan), நிலவன்(Nilavan), கலையரசி(Kalaiarasi), மலைக்கள்ளன்(Malaikkallan), வள்ளுவன்(Valluvan), வள்ளி(Valli) மற்றும் இனியாள்(Iniyaal) முதலிய பெயர்களை குறிப்பிடலாம்.

ஆனால் தமிழ் மொழியில் மிகுந்த விசேஷத்தைக் கொண்ட ஒரு மெய்யெழுத்தான ‘ழ’வை ‘ரோமானிய’ப் படுத்தி எழுதும்போதுதான் அந்த இனிய எழுத்து அலங்கோலத்திற்கு உள்ளாகிறது.

உதாரணத்திற்கு செழியன்(Chezhiyan), எழிலரசு(Ezhilarasu), அன்பழகன்(Anbazhagan), பழனி(Pazhani), தேன்மொழி(Thenmozhi) மற்றும் கயல்விழி(Kayalvizhi) போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

இந்த பெயர்களை மற்ற இனத்தவரோ தமிழ் கற்றிராத, நம் இனத்தைச் சேர்ந்த ஒருவரோ உச்சரிக்கும் போது, அந்த ‘ழ’வின் நிலை எம்மாதிரியான அலங்கோலத்திற்கு உள்ளாகிறது என்பதை கண்கூடாகவே நாம் பார்க்கிறோம் கேட்கிறோம்.

அவர்கள் பெரும்பாலும் Pazani, Thenmozi அல்லது Cheziyan, என்றுதான் உச்சரிப்பார்கள். ‘ழ’வை எங்குமே நாம் கேட்க இயலாது. இப்பெயர்ளை நேரடியாகக் தமிழாக்கம் செய்வோமேயானால், ஏறக்குைறய ‘பஸனி,’ தேன்மொஸி, செஸியன் என்ற உச்சரிப்புக்கு உள்ளாகும்.

ஆக, ‘ல,’ மற்றும் ‘ள,’ ஆகிய எழுத்துக்களை நாம் ‘ரோமானிய’ப்படுத்தி பயன்படுத்துவதைப் போல ‘ழ’விற்கும் நாம் ஆங்கில எழுத்தான ‘L’ஐ பயன்படுத்தினால் ஒரளவாவது தமிழ் மொழி சிதையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

அதாவது Chelian, Anbalagan, Thenmoli, Palani, Kayalvili, Elilarasu, என்று அவர்கள் உச்சரிக்கும் போது, 100% தூயத்தமிழ் உச்சரிப்பு அதில் இருக்காதுதான். எனினும் ‘zh’ல் உள்ள சீர்குலைவைப் போல் இருக்காது என்பதை நாம் உணர வேண்டும்.

தமிழ் எழுத்துக்களையோ பெயர்களையோ பயன்படுத்தும் போது அதன் இலக்கனத்தைதான் நாம் பாதுகாக்க வேண்டுமேத் தவிர ஆங்கில மொழியைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

‘zh’ஐ பயன்படுத்தினால் அது ‘ழ’ என பொருள்படும் என்று எந்த ஆங்கிலப் புலவர் கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. ஆனால் சற்றும் சிந்திக்காமல் நாம் அனைவருமே கண்மூடித்தனமாக பின்பற்றிக் கொண்டிருக்கிறாம்.

தமிழ் மொழியின் அழகிய எழுத்துக்களில் முன்வரிசையில் நிற்கும் ‘ழ’ அனேகமாக உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பைக் கொண்டுள்ளது என்று தாராளமாக நாம் கூறலாம்.

அப்படிப்பட்ட ஒரு எழுத்து, ஆங்கில எழுத்துக்களின் ஊடுருவலால் சிதையாமல் இருப்பதை உறுதி செய்வது நம் அனைவருடைய கடமையாகும்.