இராகவன் கருப்பையா – சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் நம் நாட்டை ஆட்சி புரிந்த அம்னோ தற்பொழுது எந்த அளவுக்கு வலுவிழந்துக் கிடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.
அந்தக் கட்சி இன்னமும் ஏன் மீண்டெழ முடியாமல் பரிதவிக்கிறது என்றால் முன்னாள் பிரதமர் நஜிப் விவகாரம்தான் அதற்கான மூலக்காரணம் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ வீழ்ந்ததற்கும் இப்போது அது முன்னோக்கி நகர இயலாமல் ஸ்தம்பித்துக் கிடப்பதற்கும் அவர்தான் காரணகர்த்தாவாக உள்ளார்.
அக்கட்சியைச் சேர்ந்த சில வாய்ப் பேச்சு வீரர்களின் அதிகப்பிரசங்கித்தனம்தான் அதனை மீண்டெழ விடாமல் கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருப்பதை அப்பட்டமாக காண முடிகிறது.
ஒரு காலக் கட்டத்தில் நஜிப் இவர்களுக்கு ஏகோபித்தத் தலைவராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் புரிந்த குற்றங்களினால் அந்த சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதை இவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இரண்டு மேகா வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருடைய பெயரைச் சொல்லியே இனிமேலும் இவர்கள் அரசியல் நடத்திக் கொண்டிருக்க முடியாது.
நீதிமன்றம்தான் அவரை சிறையில் தள்ளியதேத் தவிர அரசாங்கமோ வேறு யாரோ அதனை செய்யவில்லை என இவர்கள் முதலில் உணரவேண்டும்.
“அவரை விடுவிக்க வேண்டும், அரசாங்கம் அவரை வெளியே கொண்டுவர வேண்டும், அவருக்கு நீதி கிடைக்கவில்லை,” என்றெல்லாம் கூப்பாடுப் போட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அது முற்றிலும் அறிவிலித்தனமான ஒரு செயலாகும்.
நிதிபதி மிகத்தெளிவாக விளக்கமளித்த போதிலும், தீர்ப்பு வழங்குவதில் அவர் ஏதோ தவறு இழைத்துவிட்ட மாதிரியும் தீர்ப்பு மாற்றி எழுதப்பட வேண்டும் என்பதைப் போலவும் இவர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
அரச மன்னிப்பு விவகாரத்தில் முன்னாள் பேரரசரையும் தேவையில்லாமல் உள்ளே இழுத்து ஆதரவு தேட முற்படுகின்றனர்.
கடந்த காலங்களைப் போல அந்தக் கட்சியினர் இப்போது நாட்டை முன்னின்று வழிநடத்தவில்லை. ஆனால் பழைய நினைப்பிலேயே அவர்கள் இன்னமும் மிதப்பதுதான் நமக்கு வியப்பாக உள்ளது.
‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை,’ என்பதைப் போல உள்ளது அவர்களுடைய அடாவடித்தனமாகப் போக்கு.
நஜிபின் வழக்கு இன்னும் நீண்ட நாள்களுக்கு இழுபறியாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
எனவே இவ்விவகாரம் மீது மட்டுமே அமர்ந்து கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் அவர்கள் கட்சி முன்னோக்கிச் செல்வதற்கு தடங்களாக இருப்பதை உணரவில்லை.
பொது மக்கள், குறிப்பாக அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் விழித்துக் கொண்டார்கள். ‘உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்,’ என்பதற்கு ஏற்ப நஜிபின் நிலையறிந்து அடுத்தக் கட்டத்திற்கு நகரத் தொடங்கி விட்டனர்.
ஆனால் கட்சியின் மேல்மட்டத்தில் உள்ள சில தலைவர்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு மேலும் நலிந்து போன ஒரு கட்சியைத்தான் காண்பார்கள்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இதர மலாய்க்காரக் கட்சிகளான பெர்சத்துவும் பாஸ் கட்சியும் தங்களுடைய பலத்தை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டு அரசாங்கத்தைக் கைப்பற்றும் அளவுக்கு முன்னேறியுள்ளன என்பதுதான் உண்மை.

























