ஜ.செ.க.வை ‘கனம் தூக்கி பார்க்க’ துடிக்கும் அம்னோ

இராகவன் கருப்பையா – நம் நாட்டு அரசியலில் எந்த காலக் கட்டத்திலும் ஜ.செ.க. சீன சமூகத்தைத் தவிர வேறு யாரையும் நம்பி இருந்ததில்லை. தங்களை பல்லினக் கட்சி என அவர்கள் பறைசாற்றிக் கொள்கிற போதிலும் சீன ஆதிக்கத்தைதான் அது கொண்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

அப்படிப்பட்ட ஒரு கட்சியை, அம்னோ ‘கனம் தூக்கி பார்ப்பதைப் போல’ மிரட்டிக் கொண்டிருப்பது நமக்கு வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளது.

காலங்காலமாக நகர்ப்புறங்களில் மட்டுமின்றி அதற்கு அப்பால் உள்ள தொகுதிகளிலும் கூட சீன வாக்காளர்கள்தான் அக்கட்சிக்கு முழுமையாக ஆதரவளித்து வருகின்றனர்.

எந்தத் தேர்தலிலும் மலாய்க்கார வாக்காளர்களை நம்பி அக்கட்சி களத்தில் இறங்கியதாக சரித்திரமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக அம்னோவுடன் ஜ.செ.க. ஒரே அணியில் களம் கண்டதே கிடையாது. கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலின் போது கூட அவ்விரு கட்சிகளும் எதிரும் புதிருமாகத்தான் மோதிக் கொண்டன.

பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக் கட்சி எனும் வகையில் தேர்தலுக்குப் பிறகுதான் முதல் முறையாக ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவுடன் தற்போது ஒரே அணியில் ஜ.செ.க. இணைந்துள்ளது.

ஜ.செ.க.வின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளோடு ஒப்பிடுகையில் வெறும் 25 தொகுதிகளை மட்டுமே கொண்டுள்ள அம்னோ வலுவற்ற நிலையில் உள்ளது எல்லாருக்கும் தெரியும்.

இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள், ஜ.செ.க.வை புறக்கணிக்கப் போவதாகவும் ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேற வேண்டும் என்றும்  அச்சுறுத்தி வருவது விந்தையாக உள்ளது.

சிலாங்கூர், பூச்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜ.செ.க.வின் யோ பீ யின், முன்னாள் பிரதமர் நஜிபிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மகிழ்ச்சி  தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

அதற்காக சினமடைந்த அம்னோ பூச்சோங் பிரிவின் உறுப்பினர்கள், யோவின் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்ததோடு, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் காலக்கெடு விதித்தனர்.

எனினும் யோ அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. குற்றவாளி தண்டிக்கப்பட்டது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவிக்கும் கருத்து தனது தனிப்பட்ட உரிமையே தவிர அது ஒன்றும் சட்டத்திற்கு புறம்பான ஒன்றல்ல எனும் நிலைப்பட்டில் இவர்களுடைய மிரட்டலை அவர் பொருட்படுத்தவே இல்லை.

அடுத்த பொதுத் தேர்தலில் யோவை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் விடுத்த மிரட்டல்தான் நமக்கு கேலிக் கூத்தாக உள்ளது.

ஏனெனில் கடந்த பொதுத் தேர்தலில் அம்னோவின் ஆதரவே இல்லாமல் சுமார் 60 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையில் யோ வெற்றி பெற்றது அவர்களுக்குத் தெரியாது போலும்.

இதற்கிடையே சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற அம்னோ இளைஞர் தலைவர் அக்மாலும் ‘குழம்பியக் குட்டையில் மீன் பிடித்து’  ஆதாயம் தேட முனைந்துள்ளார்.

ஜ.செ.க.வின் மேலுள்ள கோபத்தின் எதிரொலியாக, ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லை வெளியேறுவதா என்பதைத் தீர்மானிப்பதற்கு அம்னோ இளைஞர்களை ஒன்று திரட்டி கூட்டம் நடத்தவுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ள அந்தக் கூட்டத்தினால் ஜ.செ.க.விற்கோ கூட்டணி அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதுதான் உண்மை. இதனால் அம்னோதான் ‘அதன் கைகளை சுட்டுக் கொள்ளும்.’

எனவே ஜ.செ.க.வை ‘கனம் தூக்கி பார்க்க’ எத்தனிக்கும் அம்னோ உறுப்பினர்கள் முதலில் ‘தங்களுடைய முதுகை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.’