இராகவன் கருப்பையா – தமிழ் நாட்டு சினிமா நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தின் ‘ஒலி குறுந்தகடு'(Audio CD) அறிமுக விழா கடந்த சனிக்கிழமை 27ஆம் தேதியன்று நம் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது நாம் அறிந்த ஒன்றுதான்.
தலைநகர் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற அந்நிகழ்ச்சி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அதாவது அரங்கம் நிறைந்து வழிந்த ரசிகர்கள் கூட்டம்தான் ஒரு ‘ஒலி குறுந்தகடு’ அறிமுக விழாவுக்குக் கூடிய அதிகபட்சக் கூட்டம் எனும் சாதனையை படைத்தது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த விருதினால் எத்தனை பேர்களுக்கு ஆதாயம், யாரெல்லாம் கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்றுதான் தெரியவில்லை.
ஆயிரக் கணக்கான ரிங்கிட் செலவு செய்து சாரை சாரையாக படையெடுத்துச் சென்ற நமது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா அல்லது மில்லியன் கணக்கான ரிங்கிட் வசூல் செய்த அந்த நடிகருக்குப் பெருமையா தெரியாது.
புக்கிட் ஜாலில் பகுதி மட்டுமின்றி அருகில் உள்ள நகரமான ஸ்ரீ பெட்டாலிங் உள்பட அந்த வட்டாரமே சனிக்கிழமை காலை முதல் நம் சமூகத்தைச் சார்ந்த ரசிகர்கள் கூட்டத்தினால் கலைக் கட்டியதைக் காண முடிந்தது.
நாடளாவிய நிலையிலிருந்து குழுமிய ரசிகர்களால் அந்தப் பகுதியில் உள்ள கிட்டதட்ட எல்லா தங்கும் விடுதிகளும் கூட அன்றைய தினம் முழுவதும் நிரம்பிவிட்டதாகக் கூறப்பட்டது.
அயல்நாட்டைச் சேர்ந்த ஒரு சினிமா நடிகருக்கு இப்படிப்பட்ட ஆதரவு வழங்குவது அவரவர் தனிப்பட்ட விவகாரம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான்.
ஆனால் மாதக் கணக்கிலும் ஆண்டுக் கணக்கிலும் வியர்வை சிந்தி பல்வேறு விஷயங்களை தியாகம் செய்து நம் சமூகத்திற்கும் நாட்டுக்காகவும் பெருமை சேர்க்கும் இளம் விளையாட்டு வீரர்களை எப்போது இவ்வாறு கொண்டாடி மகிழப் போகிறோம் எனும் கேள்வி எழுகிறது.
நம் சமூகத்தைச் சார்ந்த எண்ணற்ற இளையோர் தற்போது சுவர் பந்து(Squash) விளையாட்டு உள்பட பல்வேறு விளையாட்டுகளில் தேசிய நிலையில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் தடம் பதித்து வருகின்றனர்.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற, உலகத் தரத்திலான அமெரிக்க பொது ஜூனியர் சுவர் பத்து விளையாட்டின் 19 வயதிற்கு உள்பட்டவர்களுக்கான பிரிவில் நம் நாட்டின் 17 வயது நிக்கலேஸ்வர் வெற்றி பெற்றது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
அவருடைய தந்தை மோகனசுந்தரம் பல சிரமங்களுக்கிடையே சிறுகச் சிறுக சேமித்த 33 ஆயிரம் ரிங்கிட்டையும் ஆதரவாளர் ஒருவரின் 7 ஆயிரம் ரிங்கிட்டையும் கொண்டு அவ்விருவரும் அமெரிக்கா சென்றனர்.
இந்தப் போட்டிகளின் வரலாற்றில் இதுநாள் வரையில் எந்த ஒரு மலேசியரும் இவ்விருதை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பெண்கள் பொதுப் பிரிவின் உலகத் தர வரிசையில் நமது சிவசங்கரி 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு அவர் முன்னேறி வருகிறார்.
பூப்பந்து விளையாட்டின் பெண்கள் இரட்டையர் பிரிவில் நம் நாட்டின் தீனா முரளிதரன் தனது ஜோடி பெர்லி தானுடன் உலகின் 2 ஆவது நிலையில் உள்ளார். இதுவும் முன்னுதாரணம் இல்லாத ஒரு மிகப் பெரியச் சாதனைதான்.
இவ்வாராக, நம் சமூகத்தைச் சார்ந்த எண்ணற்ற இளம் விளையாட்டாளர்கள், அரசாங்க ஆதரவு நிறைவாக இல்லை எனும் போதிலும் அனைத்துலக ரீதியில் பிரமிக்கும் வகையில் கோலோச்சி வருகின்றனர்.
ஓட்டப்பந்தயம் மற்றும் கராத்தே போன்ற விளையாட்டுகள் உள்பட மேலும் பல பிரிவுகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்துமே ‘பனிப்பாறையின் முனை’தான்.
இந்தச் சாதனையாளர்கள் எல்லாருமே நம் சமூகத்தைச் சார்ந்த பிள்ளைச் செல்வங்கள். இவர்கள் அயல்நாட்டைச் சேர்ந்த ‘டிராமா’காரர்கள் அல்ல. நமது மண்ணின் மைந்தர்கள்.
இவர்களை எப்போது நாம் புக்கிட் ஜாலில் அரங்கிற்கு வரவழைத்து, போற்றி, பாராட்டி, மகிழப் போகிறோம்? இது நமது கடமை அல்லவா! அல்லது ‘இந்தப் பிள்ளைகள் சினிமா நடிகர்கள் இல்லை,’ என கடந்து செல்லப் போகிறோமா?
அருகிலுள்ள தங்கும் விடுதிகளை எல்லாம் நிரப்பி, அரங்கிற்கு சாரை சாரையாக வரிசை பிடித்துச் செல்லாவிட்டாலும், குறைந்தபட்ச சமூகக் கடப்பாட்டை நாம் நிறைவேற்ற வேண்டாமா?
எப்போது சிந்திக்கப் போகிறோம்?

























