ம.இ.கா. வெளியேறினால் அது  ஐ.பி.எஃப். கட்சிக்கு ‘ஜேக்பாட்டாகுமா!

இராகவன் கருப்பையா – தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா. விலகினால் அக்கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான ஐ.பி.எஃப். கட்சியின் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பாரிசானில் ஓர் உறுப்புக் கட்சியாக அங்கம் வகிக்க அக்கட்சி நீண்ட நாள்களாகவே போராடி வருகிறது. ஆனால் ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டார்,’ எனும் பழமொழிக்கு ஏற்ப ம.இ.கா. அதற்குத் தடங்கலாகவே இருந்து வந்துள்ளது.

தேசிய முன்னணியில் புதிதாக ஒரு கட்சி இணைய வேண்டுமென்றால் அக்கூட்டணியின் எல்லா உறுப்புக் கட்சிகளும் அதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

ஆனால் இதர எல்லா கட்சிகளும் இணக்கம் தெரிவித்த போதிலும் ம.இ.கா., குறிப்பாக அதன் முன்னாள் தலைவர் சாமிவேலு அதற்கு உக்கிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

போராக், தாப்பா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஜி.பண்டிதன் கடந்த 1990ஆம் ஆண்டில் ‘அகில மலேசிய இந்திய முற்போக்கு முன்னணி'(AMIPF) எனும் பெயரில் அக்கட்சியை தோற்றுவித்தார்.

சிறிது காலத்திற்குப் பிறகு பாரிசானில் இணைவதற்கு அவர் செய்த விண்ணப்பம் சாமிவேலுவின் தன்னிச்சையான எதிர்ப்பால் நிலுவையில் கிடத்தி வைக்கப்பட்டது.

எனினும் அக்கூட்டணியில் அங்கத்துவம் பெற இயலாவிட்டாலும் அக்கட்சியினர் மனம் தளராமல் வெளியில் இருந்து கொண்டே தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டில் எம்.ஜி.பண்டிதன் மரணமடைந்த பிறகும் கூட ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் அவர்கள் தொடர்ந்து பாரிசானுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதற்கு நன்றிக் கடனாக கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பினேங்கில் உள்ள ஜெலுத்தோங் தொகுதியில் போட்டியிட ஐ.பி.எஃப். கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

எனினும் ஜ.செ.க.வின் இரும்புக் கோட்டையான  ஜெலுத்தோங்ஙில் போட்டியிட்டது ஐ.பி.எஃப். கட்சிக்கு நல்லதொரு அனுபவத்தைக் கொடுத்ததே தவிர வேறு எந்த நன்மையும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆக தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா. வெளியேறும் பட்சத்தில் அக்கூட்டணிக்குள் நுழைவதற்கான வழித்தடம் ஐ.பி.எஃப். கட்சிக்கு சுமூகமாக அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக நீண்ட நாள்களாக மிகவும் விசுவாசமாகக் காத்திருக்கும் அக்கட்சிக்கு அத்தகைய ஒரு வாய்ப்பு அதிர்ஷ்டக் குலுக்கில் ‘ஜேக்பொட்’ அடித்தது போல்தான் என்றால் அது மிகையில்லை.

அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எ.ஃப். கட்சியின் பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பாரிசான் தலைவரும் துணைப் பிரதமருமான அஹ்மட் ஸாஹிட் ஆற்றிய உற்சாகமான பேருரை அக்கட்சியினரின் எதிர்பார்ப்புகளுக்கு உரமூட்டியிருக்கும் என்றும் நம்பலாம்.

கட்சி அரசியல் சாத்தியம் என்பது ஓட்டின் எண்ணிக்கையை பொறுத்தது.  இன்னொரு வழிமுறை இந்த இரண்டு கட்சிகளும் ஒரு கூட்டணி அமைத்து  நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்ற தொகுதிகளை சுமூகமாக பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான முதிர்ச்சியை தேடுவது காலத்தின் கட்டாயமாகும்.