இந்திய சமூகத்தை கவர்வதில் நஜிப்பை போல யாருமில்லை

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் இந்திய சமூகத்தின் ஆதரவை ஈர்ப்பதில் மற்றத் தலைவர்களோடு ஒப்பிடுகையில், முன்னாள் பிரதமர் நஜிப் தனித்துவம் வாய்ந்த திறமையைக் கொண்டிருந்தார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

குறிப்பாக தைப்பூசத் திருவிழாக்களின் போது பல தடவை அவர் பத்துமலைக்குச் சென்று மக்களின் கவனத்தை ஈர்த்த விதத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

மற்ற இனத்தவரின் சமய விழாக்களில் முஸ்லிம்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என தீவிரவாத மலாய்க்காரர்கள் பிரச்சாரம் செய்து வருவது எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் அத்தகையோரின் எதிர்மறையானக் கருத்துகளுக்கெல்லாம் துளியளவும் செவிசாய்க்காமல் தைப்பூசத் திருவிழாக்களில் நஜிப் கலந்துகொண்டு நம் சமூகத்தின் அபிமானத்தை பெற்றார்.

இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் வகையிலான குறுகிய மனப்பான்மையைக் கொண்ட கருத்துகளை அவர் எப்போதுமே உதாசீனப்படுத்துவார்.

வேட்டி கட்டி, சால்வையோடு ஜிப்பா அணிந்து, பத்துமலை வளாகத்தில் கம்பீரமாக அவர் தோற்றமளித்தக் காட்சிகள் நம் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருக்குப் பிறகு பிரதமர் பதவியேற்ற வேறு யாரும் தைப்பூசத் தினத்தன்று பத்து மலைக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டில் 2ஆவது தடவையாக பிரதமர் பதவியில் அமர்ந்த மகாதீர், பிறகு முஹிடின் மற்றும் சப்ரி, ஆகிய எவருமே பத்துமலை தைப்பூசத் திருவிழாக்களில் கலந்து கொள்ளவில்லை.

நாட்டின் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்ற அன்வார் கடந்த 2024ஆம் ஆண்டின் தைப்பூசத்தன்று பத்துமலை செல்வதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் உடல் நலக் குறைவால் அங்கு அவர் செல்ல இயலவில்லை.

கடந்த ஆண்டு, தைப்பூசத்திற்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னதாகவே அவர் பத்துமலைக்குச் சென்றார்.

அதே போல இவ்வாண்டும் கூட 2 நாள்களுக்கு முன்னதாக, அதாவது எதிர்வரும் வெள்ளிக்கிழமை 30ஆம் தேதி அவர் பத்துமலைக்கு வருகையளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1959ஆம் ஆண்டில் நமது முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானும் 1971ஆம் ஆண்டில் 2ஆவது பிரதமர் துன் ரஸாக்கும் பத்துமலை தைப்பூச விழாக்களில் கலந்து கொண்டதாகத் தரவுகள் காட்டுகின்றன.

இருந்த போதிலும் நஜிபுக்கு நிகராக வேறு எந்தப் பிரதமரும் தைப்பூசத் தினத்தன்று பத்துமலைக்கு கோலாகலமாக வருகையளித்து நம் சமூகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த மலேசியர்களின் கவனத்தையும் ஈர்த்ததாகத் தெரியவில்லை.

அவருடைய இந்த பரந்த மனப்பான்மை, தேசிய முன்னணிக்கான நம் சமூகத்தினரின் ஆதரவை ஈர்ப்பதற்கும் பெரும் பங்காற்றியுள்ளது என்றால் அது மிகையில்லை.

ஒரு நல்ல மனிதராக தன்னை நம்மிடையே காட்டிக்கொண்ட நஜிப்  நாட்டின் கஜானாவில் கை வைத்து சுமார் ரிம 450 கோடி (45 பில்லியன்) பணத்தை திருடிய குற்றத்திற்காக டிசம்பர் 26, 2025 அன்று,  அவருக்கு 25 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, மலேசிய உயர் நீதிமன்றத்தால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 2.8 பில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

அவரின் பரந்த மனப்பான்மை பரிவின் ஆளுமையால் உண்டானதா அல்லது திருட்டை சமாளிக்க அரசியல் ஆதரவுக்காக அறங்கேற்றம் செய்யப்பட்ட நாடகமா- வாசகர்களே முடிவு செய்யுங்கள்!