ஊழல் தடுப்பு ஆணையமும் எனது கண்காணிப்பில் உள்ளது – மாமன்னர்

ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உட்பட எந்தவொரு அரசு நிறுவனமும் அல்லது துறையும் ஊழலை ஒழிக்கும் எனது பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று எச்சரித்தார். இன்று அரச ஊடக அலுவலகம் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தில் அதிகமான நபர்கள் இப்போது தனது கண்காணிப்பில் இருப்பதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார். மேலும், ஊழல் என்பது மக்கள் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் அது பொறுத்துக்கொள்ளப்படாது என்றும் அவர் கூறினார்.

இந்த ஊழல் எதிர்ப்புப் போராட்டம் சில துறைகளை அல்லது லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் பெறுபவர்களை மட்டுமே இலக்காகக் கொண்டது என்று நினைக்க வேண்டாம்.

நீங்கள் காவல்துறை, குடிவரவுத் துறை, சுங்கத் துறை அல்லது வேறு எந்த நிறுவனத்தில் இருந்தாலும் கவனமாக இருங்கள்.

ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் இடைத்தரகர்கள் மற்றும் உபகரணங்கள், சீருடைகள் மற்றும் மருத்துவத் தேவைகளை வழங்கும் விநியோகஸ்தர்களும் தனது கண்காணிப்பில் இருப்பதாக சுல்தான் இப்ராஹிம் எச்சரித்தார்.

எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம்; எனக்கென்று தனிப்பட்ட உளவுத் தகவல் வட்டாரங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

நேர்மையுடன் கடமைகளைச் செய்யத் தவறும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும், அவர்களின் பதவிகள் ‘நேர்மையான மற்றும் தகுதியுள்ளவர்களுக்கு’ வழங்கப்படும் என்றும் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்தார்.

ஊழல் மற்றும் பொருட்கள் கடத்தலுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக இல்லாவிட்டால், அமலாக்க அதிகாரிகள் மற்றவர்களுக்கு வழிவிடுமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறிய மூன்று வாரங்களுக்குப் பிறகு மன்னரின் இந்த அறிக்கை வந்துள்ளது.

ஊழலை ஒழிப்பதையே தனது பிரச்சாரமாக மேற்கொண்ட அன்வார், பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகளுக்கு, ஊழலுக்கு எதிராக முழுமையாகப் போராடத் தயாராக இருக்கிறார்களா என்பது குறித்துச் சிந்திக்க ஒரு வாரம் அவகாசம் அளித்தார்.

-fmt