ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் இளம் வாக்காளர்களும், வெளிமாநிலங்களில் வாழும் ஜொகூர் மக்களுமே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பார்கள் என்று ஜொகூர் பிகேஆர் தலைவர் டாக்டர் ஜாலிகா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேசனல் கூட்டணி இந்த மாநிலத்தில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கூறியுள்ளதை அவர் நிராகரித்தார். தேர்தல் முடிவுகள் வாக்காளர்களால் தீர்மானிக்கப்படுபவையே தவிர, கணிப்புகளால் அல்ல என்று ஜாலிகா கூறினார்.
ஓங் கியான் மிங்கின் கருத்துக்களை மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவை அவருடைய தனிப்பட்ட பகுப்பாய்வு மட்டுமே என்றார். “ஒவ்வொருவருக்கும் தங்களுடைய சொந்த அரசியல் பகுப்பாய்வைச் செய்ய உரிமை உண்டு. ஆனால், தேர்தல்கள் கணிப்புகளாலோ அல்லது கருத்துக்கணிப்புகளாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. அவை வாக்குப்பெட்டியில் மக்கள் அளிக்கும் வாக்கினால்தான் தீர்மானிக்கப்படுகின்றன.”
டிஏபி கட்சியின் முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினரும், பங்கி தொகுதியின் இரண்டு முறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓங், வரவிருக்கும் ஜூலை 11 தேர்தலில் ஜொகூர் மாநிலத்தின் 56 இடங்களில் 53 இடங்களை பாரிசான் நேஷனல் கைப்பற்றக்கூடும் என்றும், பக்காத்தான் ஹரப்பான் எஞ்சிய மூன்று இடங்களை மட்டுமே பெற வாய்ப்புள்ளது என்றும் கணித்திருந்தார். மேலும், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.
கடந்த 2022 பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவு விகிதங்களின் அடிப்படையில் தனது இந்தக் கணிப்புகளை அவர் வெளியிட்டிருந்தார்; அந்தத் தேர்தலில் ஜொகூரின் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 13 இடங்களை பக்காத்தான் ஹரப்பான் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் இளம் வாக்காளர்களும், மாநிலத்திற்கு வெளியே வாழும் ஜொகூர் மக்களுமே முக்கியக் காரணியாக இருப்பார்கள் என்று ஜாலிகா கூறினார். இதன் காரணமாகவே நாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம், மேலும் அனைவரும் சொந்த ஊர் திரும்பி வாக்களிக்குமாறு ஊக்குவிக்கிறோம். ஜொகூர் மாநிலத்தை சரியான திசையில் முன்னோக்கி கொண்டு செல்ல விரும்பினால், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, என்றார்.
வாக்காளர்கள் ஏற்கனவே தங்களின் முடிவை எடுத்துவிட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்று எச்சரித்த அவர், ஜொகூர் வாக்காளர்களின் புத்திசாலித்தனத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் கூறினார். மேலும், களத்தில் தங்களுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு ஊக்கமளிப்பதாக உள்ளதாகவும் ஜாலிகா தெரிவித்தார்.
கோவிட் -19 உலகளாவிய பெருந்தொற்று காரணமாக அப்போது பலர் வாக்களிக்கச் செல்லவில்லை என்பதால், 2022 தேர்தலை தற்போதைய போட்டிக்கு ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஜொகூர் பக்காத்தான் ஹரப்பான் தலைவர் அமினோல்ஹுடா ஹசான் தெரிவித்தார்.
தற்போது கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கத்தின் கீழ் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை, மேம்பட்டு வரும் பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பு ஆகியவற்றில் உள்ள வித்தியாசத்தை ஜொகூர் மக்கள் தெளிவாகக் காண முடிகிறது என்றும் கூறினார்.
லார்க்கின் சட்டமன்றத் தொகுதிக்கான மும்முனைப் போட்டியில் களம் காணும் புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைசான் காயாட், வாக்காளர் வருகைப் பதிவே தேர்தல் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்று கூறினார். வாக்காளர்களின் வருகை அதிகமாக இருந்தால் அது பக்காத்தான் ஹரப்பானுக்கு சாதகமாக அமையும். அதுவே குறைவாக இருந்தால், பாரிசான் நேஷனலுக்கு சாதகமாக இருக்கும்.
ஜொகூரில் பாரிசான் பெறும் பெரும் வெற்றி, தனது தந்தைக்கான அரச மன்னிப்புக்கு கிடைக்கும் ஆதரவைக் குறிக்கும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மகன் நசிபுத்தீன் ரசாக் கூறியிருந்த கருத்துக்களை அவர் நிராகரித்தார்.
அந்த அறிக்கை சில குறிப்பிட்ட அம்னோ ஆதரவாளர்களிடம் மட்டுமே எதிரொலிக்கும். ஒட்டுமொத்த ஜொகூர் பொதுமக்களும் இதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை, என்று சுஹைசான் கூறினார்.
-fmt
























