உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், வெளிநாட்டினருக்குத் தனது அமைச்சகம் ஒட்டுமொத்தமாகக் குடியுரிமை வழங்கியதாகவும், 12 லட்சம் (1.2 மில்லியன்) சீனப் பிரஜைகள் மலேசியாவிலேயே தங்கியிருப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தான் பலமுறை மறுப்பு தெரிவித்துள்ள போதிலும், சில தரப்பினர் வேண்டுமென்றே காணொளிகள், சுவரொட்டிகள் மற்றும் கருத்துகளை மீண்டும் மீண்டும் பரப்பி வருவதாக சைஃபுதீன் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை நான் பலமுறை நிராகரித்துள்ளேன், மேலும் உண்மைகள் மற்றும் அதிகாரப்பூர்வ தரவுகளின் ஆதரவுடன் இதற்கான விளக்கங்களையும் வழங்கியுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும், பொதுமக்களைக் குழப்புவதற்காகவும், இன ரீதியிலான பதற்றத்தையும் வெறுப்பையும் தூண்டுவதற்காகவும், ஏற்கனவே திருத்தப்பட்ட காணொளிகள், சுவரொட்டிகள் மற்றும் கருத்துகளை சில தரப்பினர் தொடர்ந்து வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றனர்,” என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
முந்தைய அறிக்கைகள் மற்றும் ஊடகச் செய்திகளில் ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளுடன், இந்த விவகாரம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக விளக்கப்பட்டுவிட்டது என்று சைஃபுதீன் கூறினார்.
இத்தகைய அவதூறான கருத்துகளைப் பரப்புவது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது மட்டுமல்லாமல், அதைவிட கவலையளிக்கும் விதமாக, அரசு நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைத்து, இன வெறுப்பைத் தூண்டி, பொது அமைதியைக் கெடுத்து, தேசியப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகவும் அமையக்கூடும், என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பரப்புவதை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அரசியல் லாபங்களுக்காகவோ அல்லது சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ உணர்வுப்பூர்வமான விவகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் எந்தவொரு தகவலையும் நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பாக, அதன் உண்மைத்தன்மையை அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் சரிபார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துங்கள். உண்மைகள் உண்மைகளே, தரவுகள் தரவுகளே. தவறான குற்றச்சாட்டுகள் உண்மையை மறைத்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது, என்றும் அவர் கூறினார்.
-fmt
























