2026 ஆம் ஆண்டிற்கான அரசின் எரிபொருள் மானியச் செலவு ரிம 40 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவின் பெட்ரோலிய விநியோகம் தொடர்ந்து நிலையாகவும் போதுமான அளவிலும் இருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் ஆர்மிசான் முகமது அலி தெரிவித்ததாவது, 2023 முதல் இந்த ஆண்டின் ஜூன் 9 வரை, மானிய விலையில் வழங்கப்படும் டீசல் மற்றும் பெட்ரோலை தவறாக பயன்படுத்துதல் மற்றும் கடத்துதல் தொடர்பாக 2,311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் காரணமாக, அரசு இந்த ஆண்டில் எரிபொருள் மானியங்களுக்கு சுமார் ரிம 40 பில்லியன் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2026 பட்ஜெட்டில் முதலில் ஒதுக்கப்பட்ட ரிம 15 பில்லியனை விட இரட்டிப்பிற்கும் அதிகமாகும்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்களுக்கு அரசு ரிம 1.6 பில்லியன் செலவிட்டதாக தெரிவித்தார். அதன் பின்னர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாதத்திற்கு சுமார் ரிம 5 பில்லியன் வரை மானியச் செலவு உயர்ந்தது.

“தற்போதைய சந்தை விலை (கச்சா எண்ணெய்) தொடர்ந்தால், 2026 ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் வழங்க அரசு சுமார் ரிம 40 பில்லியன் செலவிட வேண்டி வரும்,” என்று அவர், தெமெர்லோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சலாம் நோர் (PN-Temerloh) எழுப்பிய கேள்விக்கு எழுத்துப் பதிலில் தெரிவித்தார்.

நிதி அமைச்சராகவும் உள்ள அன்வார் கூறுகையில், இந்த அதிகரித்த செலவு, BUDI95 திட்டத்தின் கீழ் தகுதியுடைய மலேசியர்கள் RON95 பெட்ரோலை லிட்டருக்கு ரிம 1.99 என்ற மானிய விலையில் தொடர்ந்தும் பெற உதவும் என்றார்.

மேலும், மீனவர்களுக்கு டீசல் லிட்டருக்கு ரிம 1.65 என்ற மானிய விலையில் வழங்கப்படுவதாகவும், BUDI Diesel திட்டத்தின் கீழ் டீசல் லிட்டருக்கு ரிம 2.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதோடு, RON95 பெட்ரோல் லிட்டருக்கு ரிம 2.05 என்ற மானிய கட்டுப்பாட்டு முறையிலும், டீசல் லிட்டருக்கு ரிம 2.15 என்ற நிலையான விலையிலும் விற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பெட்ரோலிய விநியோகம் நிலையானதாகவும் போதுமானதாகவும் உள்ளது. நீண்டகால எரிசக்தி நெருக்கடி நீடித்தாலும், குறிவைத்த மானிய முறைகளைப் பாதுகாத்து, விநியோகத்தை உறுதிப்படுத்த மடானி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை வலுப்படுத்தும்.

“மக்களின் நலனைப் பாதுகாப்பதே அரசின் முன்னுரிமை. குறிப்பாக வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தால் பாதிக்கப்படும் நலிவடைந்த மக்களை காக்கவும், அதே நேரத்தில் நிதி நிலை மற்றும் மானியங்களை தொடர முடியும் திறனை கவனமாக கண்காணிக்கவும் அரசு செயற்படும்,” என்று அன்வார் கூறினார்.

எரிபொருள் கசிவு, கடத்தல் கைது நடவடிக்கைகள்

தனியாக, உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அர்மிசான் முகமது அலி கூறுகையில், இந்த ஆண்டில் இதுவரை தீபகற்ப மலேசியாவில் எரிபொருள் தவறாக பயன்படுத்தல் தொடர்பான 302 வழக்குகளில் 212 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் 480 வழக்குகளில் 348 கைது செய்யப்பட்டனர்.

சபாவில் இதே போன்ற வழக்குகளில் 64 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சரவாக்கில் 26 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“2025 ஆம் ஆண்டில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் மொத்த கைது எண்ணிக்கை முறையே 113 மற்றும் 17 ஆக இருந்தது.”

“2023 முதல் இவ்வாண்டு ஜூன் 9 வரை, மானிய டீசல் மற்றும் பெட்ரோல் தவறாக பயன்படுத்தல் மற்றும் கடத்தல் தொடர்பாக மொத்தம் 2,311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4,145 வழக்குகள் அடங்கும்,” என்று அவர் கூறினார்.