தான் ஊழலுக்கு எதிராகக் கடுமையாக இருப்பதால், தன்னைப் பதவியிலிருந்து நீக்கக் கட்சிகள் கைகோர்ப்பதாகப் பிரதமர் கூறுகிறார்.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்பதால் சில அரசியல் கட்சிகள் தம்மை பதவியிலிருந்து அகற்ற ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொதுப்பணத்தைத் திருடுபவர்கள் அல்லது தங்கள் சொந்த நலனுக்காகத் தங்களது பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக மலேசிய மடாணி (Madani) அரசு கடைப்பிடிக்கும் சமரசமற்ற அணுகுமுறை, சில தரப்பினருக்கு அசௌகரியத்தை (அமைதியின்மையை) ஏற்படுத்தியுள்ளது என்று பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) தலைவருமான அன்வார் கூறினார்

“அதனால்தான் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள்; எல்லா கட்சிகளும் என்னை பதவியிலிருந்து அகற்ற ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஏன்? நாம் மிகவும் கடுமையாக இருப்பதை அவர்கள் அறிவார்கள். அரசின் சொத்துகளையும் மக்களின் நலனையும் பாதுகாக்கிறோம் என்பதையும் அவர்கள் அறிவார்கள்,” என்று ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பத்து பஹாட்டில் (Batu Pahat) நடைபெற்ற செங்காராங் (Senggarang) தொகுதி மக்களுடனான ‘PMX Meet-and-Greet’ நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பகத்தான் ஹராப்பான் தகவல் தொடர்பு இயக்குநரும், தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான பஹ்மி பட்சில் (Fahmi Fadzil) கலந்து கொண்டார்.

அரசியல் அழுத்தங்களுக்கு தாம் அஞ்சவில்லை என்றும், தமது அரசின் அடிப்படை கொள்கை தெளிவானது என்றும் அன்வார் கூறினார். அரசியல் தலைவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நிலம், அரசுத் திட்டங்கள், பங்குகள் அல்லது தனிப்பட்ட செல்வத்தை குவிக்கக் கூடாது என்பதே அந்தக் கொள்கை என்றார்.

“நான் பிரதமராக ஆன பிறகு பலமுறை ஜொகூருக்கு வந்துள்ளேன். நான் ஏதேனும் நிலம் எடுத்தேனா? இல்லை. எந்தத் திட்டத்தையும் பெற்றேனா? இல்லை. எந்தப் பங்குகளையும் பெற்றேனா? இல்லை. இந்தக் கொள்கையை நமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமும் உருவாக்க வேண்டும். வளமான மாநிலம் வேண்டுமெனில் நேர்மையும் நாணயமும் நிலைநிறுத்தப்பட வேண்டும்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து, ஜொகூர் மாநில மக்களிடம், பொதுமக்கள் நலனை மேம்படுத்தவும், தூய்மையான ஆட்சியை உறுதி செய்யவும், பகத்தான் ஹராப்பானுக்கு மாநிலத்தை ஆள ஒரு வாய்ப்பு வழங்குமாறு அன்வார் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் மாநில அரசு இருந்தால் மட்டுமே வளர்ச்சித் திட்டங்களும் மக்களுக்கான உதவித் திட்டங்களும் இன்னும் சிறப்பாக செயல்படுத்தப்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

வளமான மாநிலம், ஆனால் இன்னும் பல பிரச்சினைகள்

ஜொகூர் மாநிலத்திற்கு பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், மக்களை பாதிக்கும் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

வீட்டு வசதி, சாலைகள், பள்ளிவாசல்கள், சுராவுகள், பிற வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கான ஆதரவு போன்றவை இன்னும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாக உள்ளன என்றார்.

“வளர்ச்சித் திட்டங்கள் பில்லியன் ரிங்கிட் மதிப்பில் நடைபெறுகின்றன. ஆனால் சாதாரண மக்களுக்கு வீடுகள் இன்னும் வாங்க முடியாத அளவுக்கு விலையுயர்ந்தவையாக உள்ளன. இதற்கு மாநில அரசே பொறுப்பு. அது போதுமான அளவில் செயல்படவில்லை. ஜொகூர் ஒரு வளமான மாநிலம். சிலர் மட்டும் செல்வந்தர்களாகி, பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாகவே இருப்பதை நாம் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

டிஏபியை (DAP) பாதுகாத்த அன்வார்

பகத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிஏபி (DAP) கட்சியையும் அன்வார் பாதுகாத்தார்.

“நான் மூன்றரை ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறேன். இந்த காலகட்டத்தில் அமைச்சரவையில் உள்ள டிஏபி அமைச்சர்கள் மலாயர்களுக்கோ அல்லது இஸ்லாத்துக்கோ நன்மை செய்யும் எந்தத் திட்டத்தையும் ஒருபோதும் எதிர்க்கவில்லை. நீங்கள் பதிவுகளைப் பார்த்து உறுதிப்படுத்தலாம்,” என்றார்.

செங்காராங் மக்களின் உற்சாகத்திற்கு பாராட்டு

செங்காராங் தொகுதியில் பகத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் அதிக வெயிலையும் பொருட்படுத்தாமல் பெருமளவில் திரண்டிருந்தது தம்மை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்ததாக அன்வார் தெரிவித்தார்.

“செங்காராங் மக்களின் உற்சாகம் அபாரமாக இருந்தது. கடும் வெயிலிலும் மக்கள் பொறுமையாக காத்திருந்தனர். இவ்வளவு வெப்பத்திலும் என் அரசியல் பொதுக்கூட்டத்தில் இத்தகைய உற்சாகத்தை அரிதாகவே பார்த்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

மேலும், வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் செங்காராங், ரெங்கிட் (Rengit) மற்றும் பெங்காராம் (Penggaram) தொகுதிகளில் போட்டியிடும் பகத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குமாறும் அவர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜொகூர் மாநிலத் தேர்தல் விவரம்:

ஜொகூர் மாநிலத் தேர்தலில் 56 சட்டமன்றத் தொகுதிகளுக்காக மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முன்கூட்டிய வாக்குப்பதிவு: ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை)

பொது வாக்குப்பதிவு: ஜூலை 11