குதப்புணர்ச்சி வழக்கு II: அன்வாருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை

 

Anwar guilty1இன்று மாலை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிகேஆரின் தலைவர் அன்வார் இப்ராகிம் அவருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு II இல் குற்றவாளியே என்று தீர்ப்பளித்து அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது.

நீதிமன்றம் அன்வாரை பிணையில் விடுவித்தது. பிணை திங்கள்கிழமை செலுத்தப்படும் என்று அன்வாரின் தலைமை வழக்குரைஞர் கர்பால் கூறினார்.

அன்றைய தினமே மேல்முறையீட்டுக்கான மனுவும் தாக்கல் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

மாலை மணி 7.30 அளவில் அன்வார் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். நீதிமன்றத்தின் பின்புற வழியாக வெளியேறிய அவர் அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்களை நோக்கி கை அசைத்தார். ஆனால், அவர் எதுவும் பேசவில்லை.

அன்வார் அங்கிருந்து கிளம்பிய பின்னர், பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசினார்.

“நீதிமன்றம் அன்வாருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. ஆனால், இது மக்களின் தீர்ப்பு அல்ல”, என்று அவர் கூறினார்.

பிரதமர் நஜிப் ரசாக்கின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்று கூறிய தியன் சுவா, “நீதிமன்றம் அன்வாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தது, ஆனால் மக்கள் நஜிப்பை ஐந்து மாதங்களில் வெளியேற்றுவர்”, என்று மேலும் கூறினார்.

இதற்கு முன்னதாக பேசிய அன்வார் தாம் காஜாங் இடைத் தேர்தலில் இனிமேல் பிகேஆரின் வேட்பாளராக இல்லாத போதிலும், தமது பரப்புரையை தொடரப் போவதாக கூறினார்.

“ஆனால், நான் நாடாளுமன்றத்தில் இருப்பேன். தொடர்ந்து போராடுவோம்”, என்றாரவர்.