அரசியலமைப்புச் சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி மீது அவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்கு முறைகள், மலேசிய உயர் கல்விக் கூடங்களின் உலக அளவிலான தரம் வீழ்ச்சி காண்பதற்கான காரணங்களை விளக்குகிறது. இவ்வாறு டிஏபி கட்சியின் தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறுகிறார்.
அந்த ஒடுக்குமுறைகள் ” மிகவும் கவலை அளிக்கின்றன” எனக் குறிப்பிட்ட அவர், நல்ல கல்விக்கு அடிப்படையாகத் திகழ்வது முழுமையான ஆழமான சிந்தனையாகும். அதனை உயர் கல்விக் கூடங்கள் மேற்கொள்வதற்கு அத்தகைய நடவடிக்கைகள் தடையாக இருப்பதாக அவர் சொன்னார்.
“நமது உயர் கல்விக்கூடங்களில் கல்விச் சுதந்திரம் கிஞ்சித்தும் இல்லை என்பதையே அரசாங்கம் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.”
மாணவர்களையும் கல்வியாளர்களையும் கட்டுப்படுத்துவதற்கு பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அது உணர்த்துவதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான அவர் சொன்னார்.
2011/2012ம் ஆண்டுக்கு டைம்ஸ் 400 உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஒரு மலேசியப் பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டிய புவா, நமது பல்கலைக்கழகங்கள் ‘மோசமான சூழ்நிலையில்” இயங்குவதாகத் தெரிவித்தார்.
அதே வேளையில் 60 இதர ஆசியப் பல்கலைக்கழகங்கள் அந்த எண்ணிக்கைக்குள் வந்துள்ளன. அவற்றுள் இரண்டு அண்டை நாடான சிங்கப்பூரைச் சேர்ந்தவை. ஆறு ஹாங்காங்கைச் சேர்ந்தவை.
தலை சிறந்த மலேசியக் கல்வியாளர்களைக் கவருவதற்கும் நமது பல்கலைக் கழகங்கள் தவறி விட்டதையும் “மோசமான தரம்” காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் “மலேசியப் பல்கலைக்கழகங்கள் நடத்தப்படும் முறையினால் வெளியேறி விட்டனர்” என புவா சொன்னார்.
சிறந்த கல்வியாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தொழிலை மென்மேலும் விரிவுபடுத்திக் கொள்ள இந்த வட்டாரத்தில் உள்ள மற்ற தலை சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு இடம் பெயர்ந்து விடுகின்றனர். அது மலேசிய மாணவர்களுக்கு பாதகமான சூழ்நிலையாகும்.
“அதன் விளைவாக நமது மலேசிய மாணவர்கள் இரண்டு பக்கமும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். அவர்கள், பலவீனமான விரிவுரையாளர்களையும் பயிற்றுநர்களையும் பெற்றிருப்பதோடு மட்டுமின்றி பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம் காரணமாக ஆழமாகச் சிந்திக்கவும் முடியவில்லை.”
ஆகவே “மலேசியக் கல்வியாளர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதிலிருந்து தடுக்கும் பொருட்டு தேவை இல்லாத அழுத்தம் கொடுப்பதை” அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிஏபி கேட்டுக் கொள்கிறது. எம்சிஎம்சி என்ற மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையமும் போலீசும் அந்த பேராசிரியரை ‘அச்சுறுத்தும் முயற்சிகளை’ மீட்டுக் கொள்ள வேண்டும் எனவும் புவா வலியுறுத்தினார்.
அப்துல் அஜிஸ் சார்ந்துள்ள அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகமும் அந்த விரிவுரையாளருக்கு வழங்கப்பட்ட காரணம் கோரும் கடிதத்தத மீட்டுக் கொள்ள வேண்டும் எனறும் புவா கேட்டுக் கொண்டார்.