எம்எச்370: அதிகாரிகளுக்கு “அதிகப்படியான நேரம் தேவைப்படுகிறது” என்பதால் ஊடக சந்திப்பு ரத்து

 

MH370- press meetகாணாமல் போன எம்எச்370 பயண விமானம் “வேண்டுமென்றே” அதன் பயணப் பாதையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த   அன்றாட ஊடக விளக்கமளிப்பு சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது.

முன்னதாக, மிக அண்மைய கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய தகவல்களை அளிப்பதற்காக ஓர் ஊடகச் சந்திப்பு நடைபெறும் என்றும், செய்தியாளர்கள் தங்களுடைய கேள்விகளை முன்னதாகவே ஒரு A4 தாளில் எழுதி ஊடக அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், மாலை மணி 5.30 க்கு தொடங்கவிருந்த செய்தியாளர் சந்திப்புக்கு வந்த செய்தியாளர்களிடம் கேள்விகளுக்கு பதில் அளிக்க அதிகப்படியான நேரம் தேவைப்படுவதால் அச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

“அவர்கள் இப்போது அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர்”, என்று செய்தியாளர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை அறிவித்த ஊடக அதிகாரி ஜகிட் சிங் கூறினார்.

அடுத்த செய்தியாளர் கூட்டத்தை நாளை மாலை மணி 5.30 க்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசியாகினியின் ஒரு கேள்வி தாள் உட்பட மொத்தம் 10 தாள்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகிலுள்ள  சமா-சமா தங்கும்விடுதியில் உலக முழுவதிலுமிருந்து சுமார் 200 ஊடக பிரதிநிதிகள் எம்எச்370 விவகாரம் குறித்த செய்தி சேகரிப்புக்காகக் கூடியுள்ளனர்.

 

TAGS: