தெங்கு அட்னான்: ‘ஹிம்புன்’ ஏற்பாட்டில் அம்னோ சம்பந்தப்படவில்லை

ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணி (ஹிம்புன்) என அழைக்கப்படும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் அம்னோ சம்பந்தப்படவில்லை. வரும் சனிக்கிழமை ஷா அலாம் அரங்கத்தில் அதனை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தப் பேரணியை ஏற்பாடு செய்வதற்கு முக்கியமான மூளையாக அம்னோ இருந்ததாகக் கூறப்படும் தகவல்கள் ஆதாரமற்றவை என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறினார்.

“அம்னோவுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அரசு சாரா அமைப்புக்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக அது நடத்தப்படுகிறது,” என அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

இன உணர்வுகளைத் தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்டது எனக் கூறப்பட்டுள்ள அது அம்னோவின் திட்டம் எனக் கூறி சில தரப்புக்கள் அரசியல் ஆதாயம் தேட முயலுவதாக அவர் சொல்லிக் கொண்டார்.

இதனிடையே அந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் அம்னோ சம்பந்தப்படவில்லை என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லானும் கூறியுள்ளார்.

என்றாலும் அந்த நிகழ்வில் தனது உறுப்பினர்கள் பங்கு கொள்வதை கட்சி தடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெர்னாமா