மலேசியாவுக்கு தேவை புதிய அரசாங்கம், புதிய ராடார் சிஸ்டம் அல்ல!

 

Pas MP -Mujahidஅரச மலேசிய ஆகாயப்படைக்கு தேவைப்படுவது புதிய ராடார் அமைவுமுறை அல்ல. மாறாக அதற்குத் தேவைப்படுவது புதிய அரசாங்கம் என்று பாஸ் கட்சியின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாகிட் யுசுப் ராவா நேற்று பினாங்கில் கூறினார்.

அடையாளம் காணப்படாத விமானங்களை கண்டுபிடிப்பதற்கு அரச மலேசிய ஆகாயப்படைக்கு புதிய ராடார் சிஸ்டம் தேவைப்படுகிறது என்ற கருத்தை நிராகரித்த முஜாகிட், அதன் ராடாரில் ஒலிக்கதிர் தோன்றியவுடன் நடவடிக்கையில் இறங்க அது தவறிவிட்டது. செய்திருந்தால் காணமல் போன எம்எச்370 தை அதில் கண்டிருக்கலாம் என்றார்.

கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்று கொண்டிருச்த அந்த விமானம் மார்ச் 8 இல் அதன் 239 பயணிகளுடன் திடீரென்று காணாமல் போய் விட்டது.

புதிய ராடாருக்கு பதிலாக மலேசியாவுக்கு மிக அவசியமாகத் தேவைப்படுவது இது போன்ற நெருக்கடிகளை பொறுப்புடன் கையாளக்கூடிய புதிய அரசாங்கம் என்றாரவர்.

“இந்த விவகாரம் தற்போதைய ராடார் தரம் குறைவானது என்பது பற்றியதோ, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த விமானம் மலாக்க நீரிணையின் மேல் பறந்து செல்லும் போது தூங்கிக்கொண்டிருந்தனர் என்பது பற்றியதோ அல்ல”, என்று முஜாகிட் பினாங்கு பாஸ் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.

“புதிய ராடார் சிஸ்டம் ஒன்று வாங்கப்படும் என்று அரசாங்கம் கூறுவது விசித்திரமானதாக இருக்கிறது. இது புதிய ராடார் பற்றியதல்ல. நமக்கு புதிய அரசாங்கம் ஒன்று தேவைப்படுகிறது”, என்று முஜாகிட் கூறியபோது அங்கிருந்த 100க்கு மேற்பட்ட விருந்தினர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

“வயதாகிவிட்ட அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு அரணில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மீறலைக்கூட கையாள முடியவில்லை. ஆனால், புதிய ராடார் வாங்க வேண்டும் என்று நம்மிடம் கூறும் தைரியம் அவர்களுக்கு இருக்கிறது”, என்று அவர் இடித்துரைத்தார்.

 

TAGS: