மலேசியாவின் பெருமைமிக்க எதிரணித் தலைவர் கர்பால் சிங் இன்று அதிகாலையில் நடந்த ஒரு விபத்தில் கொல்லப்பட்டார்.
அதிகாலை மணி 1.10 க்கு 301.6 கிமீ வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. கர்பாலின் மகன் ராம் கர்பால் மற்றும் ஓட்டுநர் காயமுற்றதாக நம்பப்படுகிறது.
இன்று நடைபெறவிருக்கும் வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்கு கர்பாலும் அவரது மகனும் சென்று கொண்டிருந்ததாக மலேசியாகினிக்கு தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில், கம்பாரில் குவா தெம்புருங்கிற்கு அருகில், எடுக்கப்பட்ட படத்தில் விபத்திற்குள்ளான வெள்ளை தோயோட்டா அல்பார்ட் கார் மோசமாக சேதமடைந்திருப்பதைக் காட்டுகிறது.
கர்பால் விபத்து நடந்த இடத்திலேயே உயிர் துறந்ததாக அவரின் மகனும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் த ஸ்டார் நாளிதழிடம் கூறினார்.
இன்று காலை மணி 3.30க்கு அந்நாளிதழ் தொடர்பு கொண்ட போது, ” எனது தம்பி ராம் சொற்ப காயங்களுக்கு ஆளானதாகவும் அவருடன் தொடர்பு கொள்ள முயன்று வருவதாகவும் கோபிந் கூறினார்.
பின்னர் வெளியிடப்பட்ட ஒரு போலீஸ் அறிக்கையின்படி ராமும் விபத்திற்குள்ளான காரின் ஓட்டுநரும் காயமடையவில்லை. ஆனால், கார்பாலின் இந்தோனேசிய பணிப் பெண் கடுங்காயங்களுக்கு ஆளாகியுள்ளார். இப்போது அவர் ஈப்போ பெர்மைசுரி பைனுன் மருத்துவமலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கார்பாலின் கார் பின்னாலிருந்து மோதிய லாரியின் ஓட்டுநரும் அதிலிருந்த மூன்று பயணிகளுக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை.
74 வயதான கர்பால் இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டில் ஒரு கார் விபத்தில் சிக்கி உடல் இயக்க ஆற்றல் இழந்த நிலையில் சக்கர-நாற்காலியில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
ஆற்றல் மிக்க அரசியல்வாதியான கர்பால் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற வழக்குரைஞராவார்.
நீண்டகாலமாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த கர்பால், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய நெருப்புக் கக்குகிற உரைகள் அவருக்கு “ஜெலுத்தோங்கின் புலி” என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.
சமீபத்தில் கர்பால் சிங் டிஎபியின் தலைவர் பதவியிலிருந்து தற்காலமாக விலகிக் கொண்டார். அவருக்கு நீதிமன்றம் விதித்தத் தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீட்டின் முடிவு தெரியும் வரையில் பதவியிலிருந்து விலகியிருக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.
2009 ஆம் ஆண்டில், பேராக் மாநில அரசமைப்பு நெருக்கடியின் போது கர்பால் மாநில சுல்தானுக்கு எதிராகப் பயன்படுத்திய சொற்கள் தேசநிந்தனையானது என்று அவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது.
பிரதமரின் அனுதாபம்
டிவிட்டர் வழி பிரதமர் நஜிப் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
“நான் இப்போதுதான் அங்காரா வந்து சேர்ந்த வேளையில் மாண்புமிகு கர்பால் சிங் சாலை விபத்தில் மரணமுற்றதாக கேள்விப்பட்டேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபம்”, என்று அந்த டிவிட்டர் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கர்பால் காலமானதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு ஆழ்த அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.
தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கா கோர் மிங், அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கும் செய்தி: கர்பால் சாலை விபத்தில் இன்றிரவு மரணமுற்றார். மலேசியா ஓர் உண்மையான தேசப்பற்று மிகுந்த மகனை இழந்து விட்டது”, என்றார்.
“நமது அருமை நண்பர் கர்பால் இப்போது நம்முடன் இல்லை… அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..”, என்றார் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்.
மரணமுற்ற கர்பால் மற்றும் மைக்கல் ஆகியோரின் உடல்கள் காலை மணி 7.20 க்கு ஈப்போ பொதுமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அவரது துணை முதலமைச்சர் முகமட் ரஷிட் ஹஸ்நோன் மற்றும் பேராக் மாநில முன்னால் மந்திரி புசார் நிஜார் ஜமாலுடின் ஆகியோர் அங்கிருந்தனர்.
அவர்கள் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை கர்பாலின் மகன்கள் கோபிந்த் மற்றும் ஜக்தீப்பிடம் தெரிவித்தனர். கர்பாலின் துணைவியார் அழுது கொண்டிருக்க காணப்பட்டார். உடல்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சவப் பரிசோதணை காலை மணி 10.30 அளவில் முடிவுறும் என்று எதிர்பார்ப்பதாக கோபிந்த் கூறினார். அதன் பின்னர், உடல் பினாங்கிலுள்ள குடும்ப இல்லத்திற்கு பிற்பகல் மணி 1.00 அளவில் கொண்டு செல்லப்படும் என்றாரவர்.
விபத்து குறித்து தமக்கு காலை மணி 2.15 க்கு தெரிவிக்கப்பட்டதாக கோபிந்த் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர் தமது மனைவியுடன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்ததாக கூறினார். கோபிந்தும் அவரது தாயார் குர்மிட் கவுரும் கர்பாலின் உடலைப் பார்த்தனர்.
மூத்த அரசியல்வதியான கர்பாலின் சவ அடக்கம் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்பாலின் குடும்பத்தினரும் நண்பர்களும் வெளியூர்களில் இருக்கின்றனர். அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறோம் என்றாரவர்.
“கர்பாலின் உடல் பினாங்கு, ஜாலான் உத்தாமாவிலுள்ள அவர்களது குடும்ப இல்லத்தில் வைக்கப்படும்”, என்று கோபிந்த் மேலும் கூறினார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
இனி பெரும்பாலோருக்கு குளிர் விடும் . எதிர் கட்சியின் சிங்கம் ஆழ்த்த உறக்கத்தில் இருப்பதால் . சட்டம் என்றால் அது கர்பால் தான் .