அசீஸ் பேரியின் இடைநீக்கத்தை எதிர்த்து யுஐஏ-இல் ஆர்ப்பாட்டம்

யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ) பள்ளிவாசலுக்கு வெளியில் அப்பல்கலைக்கழகத்தின் நன்கு பிரபலமான சட்டவிரிவுரையாளர் அப்துல் அசீஸ் பேரி பணி இடைநீக்கம் செய்ப்பட்டதை எதிர்த்து நூற்றுக்கணக்கான  மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்

வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து பள்ளிவாசலிலிருந்து வெளியில் வந்த மாணவர்கள் “அறிவு வாழ்க”, “கொடுமையை எதிர்ப்போம்”, “அசீஸ் பேரியை விடுதலைசெய்” என முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் பற்றித் துல்லியமான தகவல்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. ஆனால், ஆர்ப்பாட்டக்கார்களில் சிலர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதற்கு முன்னதாக பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய ஒரு குழு,  அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பேரி இடைநிக்கம் செய்யப்பட்டதை யுஐஏ தலைவர் ஸ்லேகா கமருடின் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

“மதிப்புக்குரிய கல்விக்கழகம் என்ற யுஐஏ-இன் தோற்றத்தை நிலைநிறுத்த” அவ்வாறு செய்வது அவசியம் என்றவர்கள் கூறினார்கள்.

ஆர்ப்பாட்டத்துக்குமுன் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சொலிடேரிடி மகாசிஸ்வா மலேசியா(எஸ்எம்எம்) தனது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று இன்றுமாலை பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியது.

அம்மகஜர், அசீசுக்கு எதிராக  பல்கலைக்கழகம் “கல்விக் கொள்கைகளுடன் முரண்படும் சட்ட அழுத்தங்களை”ப் பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறது. அதற்குப் பதிலாக அவ்விவகாரம் மீது நியாயமான விசாரணையை நடத்த வேண்டும் என்றது வலியுறுத்தியது.

“பல்கலைக்கழகம் ஒரு கல்விக்கழகத்துக்குள்ள சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று மாணவர்களாகிய நாங்கள் கோருகிறோம்”, என்றது கூறியது.

அம்மகஜருக்கு மலேசிய முஸ்லிம் மாணவர் தேசிய சங்கம்(பிகேபிஐஎம்), புரோ மஹாசிஸ்வா நேசனல்(புரோ-எம்என்), அனைத்து மலேசிய முஸ்லிம் பட்டதாரி மாணவர் இயக்கம்(காலிஸ், சுதந்திர பட்டதாரி ஆர்வலர் அமைப்பு(காமி) முதலிய ஒன்பது மாணவர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே யுஐஏ நுழைவாயிலில் பாதுகாவர்கள் காவலை வலுப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்களும் செய்தியாளர்களும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல்ல அனுமதி இல்லை என்று ஒரு பாதுகாவலர் தெரிவித்தார்.