போலீசார் விரைவாக ஆக வேண்டிய அனைத்தையும் செய்து இந்திராவின் குழந்தையை மீட்டுக் கொடுக்க வேண்டும்

 

kula-ocpd1இந்திரா காந்தியின் வழக்கில் எந்த அளவிற்கு போலீஸ் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இன்று இந்திரா காந்தி, வழக்குரைஞர் என். செல்வம், டிஎபி ஈப்போ கிளை தலைவர் சேகரன் மற்றும் வழக்குரைஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் ஆகியோர் ஈப்போ ஓசிபிடி சம் சிங் கியோங் மற்றும் ஈப்போ போலீஸ் தலைமையகத்தின் விசாரணை அதிகாரி எஎஸ்பி ஸுல்லுடன் ஓர் சந்திப்பு நடத்தியதாக எம். குலசேகரன் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

“இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் பத்மநாதனை (முகமட் ரிட்ஸ்வான் அப்துல்லா) கைது செய்வதற்கான ஆனையையும் குழந்தையை கண்டுபிடிப்பதற்கான உத்தரவையும் சார்வு செய்த பின்னர் போலீசார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விசாரிப்பதற்காக நாங்கள் அங்கு சென்றோம்.

“அவரை கண்டுபிடிப்பதற்கான போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஒசிபிடி விளக்கம் அளித்தார்.

“கடந்த மூன்று நாள்களில் போலீசார் பத்மநாதனைத் தேடி பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். அவற்றில் பத்மநாதனின் தாயார் மற்றும் சகோதரர் வீடுகள், நண்பர்களின் வீடுகள் மற்றும் இதர இடங்களும் அடங்கும்.

“ஈப்போ பகுதியை வலை போட்டு தேடுவது எதற்கும் உதவாது. எங்களுக்குத் தெரிந்தவரையில் ரிட்ஸ்வான் கிளந்தான், கோட்டபாருவில் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவருடைய வழக்குரைஞர்கள்கூட இதை எங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தகவலை புக்கிட் அமானுக்கு தெரிவிக்க ஓசிபிடி ஒப்புக்கொண்டார்,” என்று குலா அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், பத்மநாதனின் கைத்தொலைபேசி எண்ணையும் போலீசாரிடம் கொடுத்ததாகவும் கூறிய குலா, போலீசார் நாட்டின் எல்லையையும் கண்காணிக்க வேண்டும் ஏனென்றால் ரிட்ஸ்வான் அடிக்கடி தாய்லாந்துக்கு செல்வதாகவும் தெரியவந்துள்ளது என்றாரவர்.

ரிட்ஸ்வானை கைது செய்வது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை புக்கிட் அமானில் சந்திக்கவும் தாங்கள் திட்டமிட்டிருப்பதாக குலா மேலும் கூறினார்.

“எங்களுக்கு பயன் முடிவு வேண்டும். தொடர்ந்து கொண்டிருக்கும் தாமதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவ்வழக்கு 2009 ஆம் ஆண்டில் தொடங்கியது. ‘இச்சட்டவிரோத’ பிரித்தலால் தாய்-மகளுக்கிடையிலான உறவில் இழப்பு/பாதிப்பு ஏற்பட்டுள்ளது”, என்றாரவர்.

“ரிட்ஸ்வானை விரைவில் கண்டுபிடிப்பதற்கு போலீசார் வேண்டிய அனைத்தையும் செய்வர் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் ஓடலாம் ஆனால் நிரந்தரமாக ஒளிந்திருக்க முடியாது!”

“ரிட்ஸ்வான் இருக்குமிடம் அல்லது அவரைப் பற்றிய தகவல் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு உதவுமாறு பொதுமக்களை கேட்டுகொள்கிறோம்”, என்று குலா மேலும் கூறினார்.

 

 

 

 

 

 

TAGS: