அசீஸ் பேரியின் பதிலடி

 

 

சட்டப் பேராசியரும் அரசமைப்பு வல்லுனருமான அசீஸ் பேரியின் வழக்குரைஞர்கள், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், உத்துசான் மலேசியா, கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நோர்டின் ஆகிய தரப்பினருக்கு சில கோரிக்கைகளை முன்வைக்கும் அறிவிக்கைகளை அனுப்பவுள்ளனர்.

அம்மூன்று தரப்புகளும் அசீஸ் பேரியைக் களங்கப்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்பதுடன் ஏதாவது இழப்பீடும் வழங்க வேண்டும். தவறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை அந்த அறிவிக்கைகள் கொண்டிருக்கும்.

“அறிவிக்கைகள் அனுப்புமாறு அசீஸ் பேரி பணித்துள்ளார். நாளை அவை அனுப்பி வைக்கப்படும்”, என்று அசீசின் வழக்குரைஞர் முகம்மட் ஹனிபா மைடின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

மகாதிர், அப்துல் அசீஸ் தெரிவித்த கருத்து மரியாதைக் குறைவானது என்றும் அது கீழை நாட்டுப்பண்புக்கு ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சட்டப் பேராசியர், 1983-இலும் 1993-இலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மகாதிரின் சொல்லும் செயல்களும் அதைவிட மோசமானவை என்றார்.

உத்துசான் மலேசியா, மலேசியாகினியிடம் தாம் தெரிவித்ததைத் திரித்துக்கூறி தம்மை மரியாதைக்குறைவான நபராக, இழித்துப்பேசும் தன்மையராக, திமிர் பிடித்தவராகக் காண்பிக்க முயல்கிறது என்றாரவர்.

சுல்கிப்ளி, உத்துசான் உள்ளிட்ட ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் அப்துல் அசீஸ், எல்லாப் பதவிகளிலிருந்தும் வெளியேற வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தானிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தது.

உத்துசான் மலேசியா நாளேட்டில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டிருந்த செனட்டர் எஸாம் முகம்மட் நோர்மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பேராசிரியர் ஆலோசித்து வருவதாக ஹனிபா கூறினார்.