பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஈகைத்திருநாள் சிறப்பு நிதியுதவி: மாநில அரசு ஒப்புதல்

பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் 1,000 ஈகைத்திருநாள் ரிங்கிட் கால சிறப்பு நிதியுதவி வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2026-ஆம் ஆண்டிற்கான இந்தச் சிறப்பு நிதியுதவியின் கீழ், குர்ஆன் மற்றும் பர்து ஐன் (Kafa) வகுப்புகளின் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், மக்கள் சமய ஆரம்பப் பள்ளிகள் (SRAR) மற்றும் மக்கள் சமய உயர்நிலைப் பள்ளிகளின் (SMAR) ஆசிரியர்களுக்கும் 300 ரிங்கிட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

“அரசு உதவிபெறும் சமயப் பள்ளிகள் , தஹ்பிஸ்  மற்றும் பொண்டோக் கல்வி நிறுவனங்கள், இஸ்லாமிய பாலர் பள்ளிகள் மற்றும் பினாங்கில் உள்ள சீனத் தனியார் பள்ளிகளின் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இந்த நிதியுதவி வழங்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிதியுதவி மார்ச் 16-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், இதன் மூலம் மொத்தம் 7,317 பேர் பயனடைவார்கள் என்றும் சாவ் கோன் இயாவ் தெரிவித்தார். இதற்காக மாநில அரசுக்கு மொத்தம் 8.49 மில்லியன் ரிங்கிட் நிதிச் செலவு ஏற்படும்.

மேலும் அவர் கூறுகையில், “பினாங்கு 2030 தொலைநோக்கு திட்டத்தை நனவாக்குவதில் மாநில அரசுக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பைப் பாராட்டும் ஒரு அடையாளமாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது,” என்று குறிப்பிட்டார்.

-fmt