“அரசியல்வாதிகளுடைய குடும்பங்கள், கறை படிந்த அரசியலில் இழுக்கப்படக் கூடாது. அரசியல் ஆதாயத்துக்காக அவை பயன்படுத்தப்படக் கூடாது.” இவ்வாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
“நவீன ஜனநாயகத்தின் அடிப்படை இதுதான். நீங்கள் கொள்கை விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அரசியல் வேறுபாடுகளை அரசியல்வாதிகளுடைய பலவீனங்கள் அடிப்படையில் விவாதிக்கலாம்.”
“ஆனால் குடும்பங்களை விட்டு விடுங்கள்… அரசியல் ஆதாயத்துக்காக குடும்ப உறுப்பினர்களை இழுக்க வேண்டாம்.”
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் 16 வயது புதல்வன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை மீது நஜிப் கருத்துரைத்தார்.
தமது புதல்வர், சக பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதை மறைப்பதற்கு லிம் முயலுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
என்றாலும் அரசியலிலிருந்து குடும்ப உறுப்பினர்களை விலக்கி வைக்கும் கொள்கை, எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கூட்டணிக்கும் பொருந்தும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
“எனக்கு அந்த விவகாரத்தின் விவரங்கள் தெரியாது. குடும்பங்களை இழுக்கக் கூடாது என்ற நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் எதிர்க்கட்சிகள் உட்பட எல்லாத் தரப்புக்களும் அதனை பின்பற்ற வேண்டும்.”