அம்பிகா தீவிரவாதத்தை ஈர்க்கக்கூடும், உத்துசான் உளறுகிறது

 

Ambigak-utusanஇனவாதத்தை எதிர்ப்பதற்காக சமீபத்தில் அம்பிகா அறிவித்த புதிய அரசு சார்பற்ற அமைப்பு அநோக்கத்திற்கு மாறாக இனவாதத்தை ஈர்க்கக்கூடும் என்று அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா உளறிக்கொட்டியுள்ளது.

“அவருக்கு (அம்பிகாவுக்கு) எதிரான மலேசிய மக்களின் சினம், குறிப்பாக முஸ்லிம்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகளில், இன்னும் அடங்காமல் இருக்கிறது”, என்று அந்நாளிதழின் ஆசிரியர்குழுவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி புனைப்பெயரில் எழுதும் அவாங் செலமாட் கூறுகிறார்.

அம்பிகா மற்றும் பாக் சாமாட் தலைமையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நெகாரா-கு என்ற அரசு சார்பற்ற அமைப்பு குறித்து அந்நாளிதழ் இவ்வாறு கூறிற்று.

அந்நாளிதழின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியா அந்த புதிய அமைப்பு கொண்டுள்ள பெயர் பற்றி குறைபட்டுக் கொண்டது. அது தேசிய கீதத்தின் அதே பெயரைக் கொண்டுள்ளதாக கூறுகிறது.

“மலேசியாவில் எவரும் ஓர் அரசு சார்பற்ற அமைப்பை உருவாக்கலாம், ஆனால், ‘நெகாரகு’வை என்ற பெயரை தவறாகப் பயன்படுத்தக்கூடாது, அதுவும் அரசியல் நோக்கங்களுக்காக”, என்று அது கூறிற்று.

டிஎபி மற்றும் பிகேஆர் போன்ற எதிர்கட்சிகளுக்கு உதவுவதற்காக இந்த அமைப்பை அம்பிகா உருவாக்கியுள்ளார் என்று அந்த நாளிதழ அவரை சாடியது.

நெகாரா-கு என்ற அமைப்பை அதன் தற்போதைய பெயரில் பதிவு செய்ய வேண்டாம் என்று அது சங்கங்களின் பதிவாளரை கேட்டுகொண்டுள்ளது.

“அதன் பெயரை அஜண்டாகு (Agendaku) என்று மாற்றிக்கொள்ளாத வரையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பாக இருக்கட்டும். அது அம்பிகாவின் முன்னைய நடவடிக்கைகளுக்கும் கீர்த்திக்கும் மிக பொருத்தமானதாக இருக்கும்.”

நெகாரா-கு இயக்கம் இடதுசாரி முஸ்லிம் குழுக்களான இஸ்மா மற்று பெர்காசா போன்றவற்றுக்கான எதிர்வினையாக கருதப்படுகிறது.