நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படாத மற்றும்/அல்லது நியமிக்கப்பட்டாத நபர்கள் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் தொடுத்திருந்த வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்விவகாரத்தை தாம் பெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப் போவதாக குலா தெரிவித்தார்.
அமைச்சர்கள் அப்துல் வாஹிட் ஒமார் மற்றும் பால் லவ் மற்றும் துணை அமைச்சர்கள் லோக பால மோகன் மற்றும் அஹமட் பாஷா முகமட் ஹனிபா ஆகியோரின் நியமனம் அரசமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரமாகும் என்று குலா இந்த வழக்கின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
தேவான் ரக்யாட் மற்றும் தேவான் நெகாரா ஆகியவற்றின் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டத்தின் விதிகளாகும்.
“அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 43(2)(b) மற்றும் 43 A(1) இதற்கு வகை செய்கின்றன.
மே 5, 2013 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்த நால்வரும் போட்டியிடவில்லை. மே15 இல் அவர்கள் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர் (செனட்டர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவதற்கு முன்னதாக).
“மே 15 இல் அவர்கள் நாடாளுமன்ற இரு அவைகளின் ஒன்றில் உறுப்பினர்களாக இல்லை ஏனென்றால் அவர்களுக்கு அதுவரையில் பதவிப் பிரமாணம் செய்யப்படவில்லை. ஆகவே, அவர்களது நியமனம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று எனது வழக்குரைஞர்கள் வாதாடினார்.
“இங்கிருந்து, நான் பெடரல் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப் போகிறேன், ஏனென்றால் இது அரசமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட விவகாரமாகும்”, என்று குலா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
நீதிபதிகள் லிண்டன் அல்பர்ட், ரோஹானா யூசுப் மற்றும் வெரோன் ஓங் லாம் கியட் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு இந்த மேல்முறையீட்டை செவிமடுத்து தள்ளுபடி செய்தது.
தம்பி குலசேகரா! இவர்கள் இல்லாவிட்டாலும் இவர்கள் இடத்திற்கு மற்ற பாரிசான் தூக்குத் தூக்கிகள் வரவே செய்வர். ஒருகால் அவர்கள் தற்போதைய உறுப்பினர்களை விட இன்னும் மோசமானவர்களாக இருக்கலாம் அல்லவா. வீணான இந்த வேலையை விட்டுவிட்டு போய் தொகுதி மக்களின் பிரச்சினைகளை கவனியும் ஐயா! மக்களால் தேர்வு செய்யப்படும் மன்ற உறுப்பினர்கள் வர வர தொகுதி மக்களை கவனிப்பதே இல்லை.
ஐயா குலா அவர்களே , தொகுதியில் சென்று மக்கள் பிரச்சனைகளை கவனிப்பது
மிக மிக முக்கியம் . அதோடு சட்டத்திலுள்ள ஓட்டைகளை எடுத்து சொல்வதும் உங்கள்
கடமையே ! மக்களை விழிப்படைய செய்வதற்கு நன்றி !!
நல்ல முயற்சி அது, பாராட்டுகள் .. தொகுதியை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தால் போதாது. எது அநீதி என்று தோன்றுகிறதோ அதையும் துணிந்து கேட்டுப் போராட வேண்டும். அது தான் ஓர் எதிர்கட்சித் தலைவனின் பணி. தொடர்ந்து போராடுங்கள், பாராட்டுகள்.! பி. பட்டு இல்லாத குறையை நீங்கள் தீர்க்க வேண்டும், மறந்து விடாதீர்கள் ஐயா.
எந்த கோர்ட் தள்ளுபடி செய்தாலும் எதுவரை கொண்டுபோக முடியுமோ அதுவரை கொண்டு செல்லுங்கள். வெற்றி கிட்டாவிட்டாலும் மக்களிடையே ஏற்படும் விளிப்பே வெற்றிதான்.
நீங்கள் மட்டும் வாய் திறக்காமல் இருந்திருந்தால் ;இப்படி ஒரு குறைப்பாடு எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும் குலா !
நடக்கும் குறைபாடுகளை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக விளக்கும் உங்களின் சேவைக்கும் திறமைக்கும் பாராட்டுக்கள். தொடரட்டும் மக்கள் சேவை. அமரர் வி.டேவிட், பி.பட்டு இல்லாத குறையை நீங்கள் நிவர்த்தி செய்து வருகிறீர். நன்றி! நன்றி! திரு குலா அவர்களே!!!!
நம் நாடு போகும் போக்கில் எதிர்க்கட்சி தலைவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காமல் போவது கூட எனக்கு வருத்தமில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களே அதைப் புரிந்துகொள்ளாமல் அறிக்கைவிடுகிறார்களே அதுதான் வேதனையளிக்கிறது.