பினாங்கில் உள்ள அந்த மாநில டிஎபி தலைமையகத்தின் மீது நான்கு நாட்களுக்கு முன்பு சிவப்புச் சாயம் வீசப்பட்டது. இன்று அதிகாலை மணி மூன்று அளவில் அந்தக் கட்டிடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கை அடுக்குகளுக்கு நெருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அந்த விஷயம் குறித்து கொம்தார் டிஎபி உறுப்பினர் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். “அதிகாலை மூன்று மணி அளவில் யாரோ ஒருவர் பினாங்கு டிஎபி தலைமையகத்துக்கு நெருப்பு வைக்க முயன்றுள்ளார். அந்தத் தலைமையகத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த எல்லாப் பத்திரிக்கைகளும் கருகி விட்டன. நான்கு நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது தாக்குதல்.”
அண்டை வீடுகளில் குடியிருந்தவர்களும் தீயணைப்புத் துறையும் 20 நிமிடங்களில் நெருப்பை அணைத்து விட்டதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது இங் கூறினார். அதனால் கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.
அண்டை வீட்டுக்காரர்கள் தீயணைப்புத் துறையுடன் தொடர்பு கொண்ட 15 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தை சென்றடைந்தனர் என அந்த டிஎபி தலைவர் சொன்னார்.
“போத்தல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. தீ வைத்ததாக ஐயுறப்படும் நபர் நெருப்பைப் பற்ற வைப்பதற்கு மண்ணெண்ணையைப் பயன்படுத்தினரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை,” என்றார் அவர். அதனைச் சோதனை செய்வதற்காக தீயணைப்பாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
“அந்தக் கட்டிடத்துக்கு முன்புறம் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் ஒருவர், நெருப்பு பற்றிக் கொண்ட பின்னர் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுவதைப் பார்த்திருக்கிறார்.”
தாக்குதல்களுக்கு பாத்வா-உடன் தொடர்பு இருக்கும் சாத்தியமுண்டு
அந்தச் சம்பவம் “அரசியல் நோக்கம்” கொண்டது என்றும் அந்த விவகாரம் மீது இன்று காலை டிஎபி போலீசில் புகார் செய்யும் என்றும் இங் தெரிவித்தார்.
அந்தச் சம்பவம் பற்றி ஊடகங்களுக்கு மேல் விவரங்களைத் தருவதற்காக மாநில டிஎபி தலைவர் சாவ் கோன் இயாவ் இன்று காலை மணி 10.30க்கு நிருபர்களை சந்திக்கிறார்.
ஜாலான் தாலிபோனில் உள்ள தலைமையகம் மீதும் லோரோங் செராத்துஸ் தாவுனில் உள்ள இங்-கின் சேவை மய்யம் மீதும் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சிவப்புச் சாயம் வீசப்பட்டது.
அண்மையில் திருக்குர் ஆன் வாசகங்கள் ஒலிபெருக்கிகள் வழி ஒலிபரப்பப்படுவதற்கு பினாங்கு பாத்வா மன்றம் தடை விதித்தது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கும் அந்தச் சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நேற்று தெரிவித்திருந்தார்.