ஹமிடி எச்சரிக்கை: இந்த நான்குடன் விளையாடாதீர்

 

Hamidi-Social contract1அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ள நான்கு முக்கிய இன உறவுகள் பற்றிய சமூக ஒப்பந்தத்துடன் விளையாட முயற்சிக்க வேண்டாம் என்று அம்னோவின் உதவித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அஹமட் ஸாகிட் இன்று அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளார்.

இந்த நான்கையும் தற்காப்பதில் அம்னோ முன்னணியில் நிற்கும் என்பதை வலியுறுத்திய அவர், இந்த நான்கையும் தகர்ப்பது நாட்டின் இன திடநிலையை பாதிக்கும் என்றாரவர்.

சமூக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளதாக அவர் கூறிய நான்கும் (1) இஸ்லாம், நாட்டின் அதிகாரப்பூர்வமான சமயம், (2) மலாய் ஆட்சியாளர்கள், (3) மலாய்க்காரர் உரிமைகள், மற்றும் (4) மலாய் மொழி, தேசிய மொழி ஆகியவையாகும்.

“இந்த நான்கையும் தகர்க்க முயற்சிக்காதீர்கள் ஏனென்றால் நாங்களும், அம்னோ, அரசாங்கமும் அவ்வாறு செய்வதற்கான துணிச்சலுடையவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்”, என்று உள்துறை அமைச்சர் ஹமிடி எச்சரித்தார்.

“இந்த விவகாரத்தில் சமாதான உடன்படிக்கைக்கு இடமே இல்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்; சம்பந்தப்பட்டவர்களுக்கு: அரசமைப்புச் சட்டத்திற்கு சவால் விட முயற்சிக்காதீர்கள்”, என்று அம்னோ உதவித் தலைவரான அவர் பெசுட் அம்னோ தொகுதி பேராளர்களின் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய போது கூறினார்.