டிஏபி தலைமையகத்தைக் கொளுத்துவோம் என்ற மிரட்டலுக்கு எதிராக வழக்கு இல்லை: ஏஜி முடிவு

hqடிஏபி  தலைமையகத்தைக்  கொளுத்தப்போவதாகக்  கூட்டரசு  பிரதேச  அம்னோ  இளைஞர் பகுதி  விடுத்த  மிரட்டலுக்கு  எதிராக  “மேல்நடவடிக்கை  இல்லை” என  முடிவு  செய்து  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) அலுவலகம்  வழக்கை  மூடியுள்ளது.

உள்துறை  அமைச்சர்   ஜாஹிட் ஹமிடி,   நாடாளுமன்றத்தில்  எழுத்து  வடிவில்  தமக்களித்த  பதிலின்வழி  இத்தகவல் தெரிய  வந்ததாக  டிஏபி  செர்டாங்  எம்பி  ஒங்  கியான் மிங்  கூறினார்.

“விசாரணை  அறிக்கை   செப்டம்பர்  17-இல் ஏஜி அலுவலகம்  அனுப்பப்பட்டு  அங்கு  மேல்நடவடிக்கை  இல்லை  என  முடிவு  செய்யப்பட்டது”, என  அப்பதிலில்  கூறப்பட்டிருந்தது.

ஏஜி-இன்  முடிவை  ஒங்  கண்டித்தார்.  அது,  மற்ற  தரப்பினருக்கும்  இதுபோன்ற  மிரட்டல்கள் விடுவதற்குத்  துணிச்சலைக்  கொடுக்கும் என்றார்.

“ஒரு  கட்டிடத்தைக்  கொளுத்தப்போவதாக  மிரட்டுவது  ஏஜியின்  பார்வையில் ஒரு  குற்றச்செயல்  அல்ல  என்பதுபோலத்  தெரிகிறது.

“வருங்  காலத்தில்  டிஏபி,  பிகேஆர்,  பாஸ்  தலைமையகங்களைக்  கொளுத்தப்போவதாக  இதுபோன்ற  மிரட்டல்கள்  அதிகம்  வரலாம்”, என்றவர் சொன்னார்.