குலா: புதிய பாலர்பள்ளி எங்கே?

kula-280x300பாலர்பள்ளிகள் கட்டுவதற்கு (2014 ஆண்டு பட்ஜெட்டில்) ரிம58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நிதியிலிருந்து சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் கல்வி அமைச்சரிடம் கேள்வி கேட்டிருந்தார்.

அவர் இன்னொரு கேள்வியையும் கேட்டிருந்தார். அனைத்து மொழிப்பள்ளிகளிலும் 100 விழுக்காடு பாலர்பள்ளிகள் அமைக்கப்படுவதற்கான நீண்ட கால திட்டங்கள் யாவை?

என்னையும் மக்களையும் முட்டாளுக்கும் திட்டமா?

குலாவின் இரு கேள்விகளுக்கும் எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.

அப்பதிலில், “மொத்த பாலர்பள்ளி வகுப்புகள் 8,898. அதில் தேசியப்பள்ளிகளில் 8,120 வகுப்புக்கள். சீனப்பள்ளிகளில் 556 வகுப்புக்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் 222 வகுப்புக்கள். மேலும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாலர்பள்ளிகளில் படிக்க இயலாதவர்கள் கெம்மாஸ், பெர்பாடுவான் நடத்தும் பாலர் பள்ளிகளில் சேர்ந்து பயிலலாம்.

11 ஆவது 5 ஆண்டு திட்டத்தில், கல்வி அமைச்சு 2016 இல் இருந்து 2020 வரையில் ஒவ்வொரு ஆண்டும் 250 புதிய பாலர் வகுப்புக்களை ஆரம்பிக்க கூடுதல் நிதி வேண்டி விண்ணப்பித்துள்ளது”, என்று கூறப்பட்டுள்ளது.

இப்பதில் தமது கேள்விக்கான சரியான பதில் அல்ல என்று கூறும் குலா, “என்னுடைய கேள்வி தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா அல்லது வேண்டுமென்றே ஏனோ தானோவென்று பதில் கொடுத்து என்னையும் மக்களையும் முட்டாள்களாக்கப் பார்கிறதா இந்த அரசாங்கம் என்று எனக்குத் தெரியவில்லை”, என்றார்.

கல்வி அமைச்சின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ள 222 தமிழ்ப் பாலர்பள்ளி வகுப்புகள் புதியவை அல்ல. அந்த “222 தமிழ்ப் பாலர் வகுப்புக்கள் எற்கனவே உள்ளவை. இவ்வகுப்புக்கள் யாவும் 172 தமிழ்ப்பள்ளிகளில் உள்ளன. சில பள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள 351 தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளி வகுப்புகள் இல்லை”, என்று கூறுகிறார் குலா.

நான் கேட்ட கேள்வி இதுதான்

“2013ல் அறிவிக்கப்பட்ட 2014 ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாலர்பள்ளிகளுக்காக மொத்தம் 58கோடி ஒதுக்கப்பட்டது. அதில் தேசிய, சீன தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும். அந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்ப்பள்ளிகளில், அதாவது எஞ்சியுள்ள 351 தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் அமைக்கப்பட்டன?

கேள்விக்கான சரியான பதிலை கூறாமல், ஏற்கனவே உள்ள 222 பாலர்பள்ளி வகுப்புகள் இந்த ரிம58 கோடியில்தான் கட்டப்பட்டன என்ற தவறான பதிலை எப்படி ஏற்றுகொள்வது என்று குலா வினாவினார்.

“2014 ஆம் ஆண்டில், ஒரு பாலர்பள்ளி கூட தமிழ்ப்பள்ளிகளில் அமைக்கப்படாத நிலையில், ஒதுக்கப்பட்ட ரிம58 கோடி எங்கு போனது?

“மொத்த தொகையுமே தேசியப்பள்ளிகளுக்கு மட்டுமே போய்ச் சேர்ந்ததா?

“அல்லது, ஏற்கனவே நான் கேள்வி எழுப்பியிருந்தது போல ஒரு குறிப்பிட்ட இந்திய அரசு சாரா இயக்கம் அந்த பணத்தைச் சுருட்டி விட்டதா? நிதியைப் பெற்றுக் கொண்ட அந்த அரசு சாரா இயக்கம் எத்தனை பாலர்பள்ளி வகுப்புக்களை அந்நிதியைக் கொண்டு ஆரம்பித்துள்ளது?”, என்று கேள்விக்கணைகளைத் தொடுத்த குலா, தமது அரசாங்கம் தெளிவாகவும், பொறுப்புடனும் செயல்படுகிறது கூறும் நஜிப் “இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்” என்று கேட்டார்.

புதிய பாலர்பள்ளிகளுக்காக கல்வி அமைச்சு செய்துள்ள விண்ணப்பத்தையும், பிரதமரின் 2015 ஆண்டுக்கான பட்ஜெட்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் 2015 ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளி வகுப்புகளுக்கான ஒதுக்கீடு ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது என்று குலா சுட்டிக் காட்டினார்.

இதன் அர்த்தம் 2015 ஆம் ஆண்டில் எந்த ஒரு பாலர்பள்ளியும் கட்டப்படாது என்பதாகும், ஏனெனில் 2016 லிருந்து மட்டுமே 250 பாலர்பள்ளி வகுப்புகள் கட்டுவதற்கான நிதிக்கு கல்வி அமைச்சு விண்ணப்பித்திருக்கிறது என்று குலா தெளிவுபடுத்தினார்.

“இதற்கு கல்வித் துணை அமைச்சர் பி. கமலநாதனின் பதில் என்ன?”, என்று அவர் வினவினார்.

தாம் இது குறித்து வாய்மொழிக் கேள்வி நேரத்தின் போது மீண்டும் கேள்வி எழுப்பப் போவதாக குலா கூறினார்.