இப்ராகிம் அலியின் “பைபிள் எரிப்பு” மிரட்டல் தேச நிந்தனையானதல்ல

Pas to Pakatan-ibrahim aliமலாய் மொழியிலான பைபிள் பிரதிகளை எரிக்கப் போவதாக பெர்காசாவின் இப்ராகிம் அலி விடுத்திருந்த மிரட்டல் விவகாரத்தில் இதுவரையில் மௌனியாக இருந்து வந்த சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) இன்று வாய் திறந்து இப்ராகிம் அலியின் மிரட்டல் தேச நிந்தனைப் போக்கைக் கொண்டதல்ல என்று அறிவித்துள்ளது.

பினாங்கு, ஜெலுத்தோங்கில் பொதுமக்களுக்கு, முஸ்லிம்கள் உட்பட, மலாய் மொழியிலான பைபிள் பிரதிகள் வினியோகிக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியதுதான் அவர் மீது நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் என்று ஏஜி அலுவலகம் கூறுகிறது.

அச்சம்பவத்தின் அடிப்படையில் அவர் பேசியதால் அது தேச நிந்தனை போக்கை கொண்டதல்ல. அவரது அறிக்கை முழுமையாக ஆராயப்பட்ட பின்னர் அது தேச நிந்தனை போக்கையுடைய வகையைச் சார்ந்தல்ல என்று ஏஜி அறிக்கை கூறுகிறது.

இப்ராகிம் அலி கூறியது இஸ்லாத்தின் புனிதத்தைத் தற்காப்பதற்காகத்தான். அதைத்தான் அவர் மிரட்டல் விடுத்த போது கூறினார் என்று ஏஜியின் அறிக்கை கூறுகிறது.

“சமயத் தகராற்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை இப்ராகிம் அலி கொண்டிருக்கவில்லை. அவர் வெறுமனே இஸ்லாத்தின் புனிதத்தைத் தற்காத்தார்”, என்று ஏஜியின் அறிக்கை மேலும் கூறுகிறது.