மாணவர் பேரணி நடப்பதைத் தடுக்க யுஐஏ இழுத்து மூடப்பட்டது

uiaமலாயாப் பல்கலைக்கழகத்தைப் பின்பற்றி  யுனிவர்சிடி  இஸ்லாம்  அந்தாராபங்சா(யுஐஏ)-வும்  மாணவர்  பேரணி  நடப்பதைத் தடுக்கும்  நடவடிக்கையில் இறங்கி  நுழைவாயில்களை  இழுத்து  மூடி  மின்சாரத்தையும்  துண்டித்துவிட்டது.

அதன்  விளைவாக  நேற்றிரவு  நூற்றுக்கணக்கான  மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்கு  வெளியில் கூடினர்..

பேரணியில்  யுஎம்  மாணவர் மன்றத்  தலைவர்  பாஹ்மி  சைனலும்  சட்டப்  பேராசிரியர்  அசீஸ்  பாரியும்  பேசவிருந்ததுதான்  தடைவிதிப்புக்குக்  காரணமாம். இதை  பாஹ்மியே  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அசீஸ்  பாரியைத்  தொடர்புகொண்டபோது, தாம் சிலாங்கூர், கோம்பாக்கில்  உள்ள  பல்கலைக்கழகத்துக்குள்  செல்ல  முடியாமல் தடுக்கப்பட்டதாக மலேசியாகினிக்கு  அனுப்பிய  மின்னஞ்சலில்  கூறினார்.

“நேற்றிரவு  9.30க்குப்  பல்கலைக்கழகம்  சென்றேன். ஆனால், பாதுகாவலர்கள்  பாதுகாப்பு  காரணங்களைச்  சொல்லித்  தடுத்தனர்.

“பாதுகாவலர்களும்  போலீசாரும்  சூழ்ந்துகொள்ளவே. அங்கிருந்து  வெளியேறினேன்”, என்றார்.

பின்னர், அவர்  இரவு  11.30க்குப்  பல்கலைக்கழகத்துக்கு  வெளியில்  மாணவரிடையே  பேசினார்.

அங்கு  யுஎம்  சட்ட  விரிவுரையாளர்  அஸ்மி  ஷரோமும்   மாணவர் தலைவர்கள்  பலரும்  கூடியிருந்தனர்.

அசீஸ்,1989-இலிருந்து  2011வரை  யுஇஏ-இல்  பணியாற்றியவர்.   சிலாங்கூர்  சுல்தானைக்  குறைகூறிக்  கருத்துரைத்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.

நேற்றிரவு  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த  பேரணி, ‘Jelajah Mahasiswa, Bebaskan Universiti’ (பல்கலைக்கழகங்களை  விடுவிக்கும்  மாணவர்  சுற்றுலா) என்னும்  இயக்கத்தின்  ஒரு  பகுதி  என  பாஹ்மி  கூறினார்.

மாணவர்கள்  அடுத்து  செல்லவிருப்பது  யுனிவர்சிடி  மலேசியா  சாபாவுக்கு(யுஎம்எஸ்). அங்கு  மேலும்  கடுமையான  நடவடிக்கையை  எதிர்நோக்குகிறார்  பாஹ்மி.