விவேகனந்தா ஆசிரமம் பிரிக்பீல்ட்ஸ் “ஆன்மாக்களில்” ஒன்று, நூருல் இஸ்ஸா

 

maicciகோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்துள்ள 110 ஆண்டுகால பழமை வாய்ந்த விவேகனந்தா ஆசிரமம் வாணிக மேம்பாட்டு திட்டத்தால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற இந்திய சமூகத்தின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன.

இன்று காலை மணி 10.00 அளவில் சுமார் 300 ஆதரவாளர்கள் விவேகானந்தா ஆசிரமத்தின் முன் கூடினர். அவர்களில் மஇகாவின் உதவித் தலைவர் எம். சரவணனும், இளைஞர் பிரிவின் தலைவர்களும், பக்கத்தான் பிரதிநிதிகளும் காணப்பட்டனர்.

விவேகனந்தா ஆசிரமத்தின் அறங்காவலர்கள் ஆசிரமத்தின் பின்புறத்திலுள்ள நிலத்தை மேம்படுத்தி அதில் 23 மாடி கட்டடத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். அத்திட்டத்தை எதிர்க்கும் தரப்பின் தலைவர்கள் இன்றைய எதிர்ப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரிக்பீல்ட்ஸ்சின் ஆன்மா

 

விவேகனந்தா ஆசிரமத்தை காப்பாற்ற முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா மற்றும் அக்கட்சியின் தொடர்புத்துறை இயக்குனர் ஃபஹாமி ஃபாட்ஸில் ஆகியோர் இன்று நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரிக்பீல்ட்ஸ்சின் கடைசி “ஆன்மாக்களில்” ஒன்று விவேகனந்தா ஆசிரமம் என்று நூருல் குறிப்பிட்டார்.

விவேகனந்தா ஆசிரம அறங்காவலர்களின் கவலையை தாம் புரிந்து கொண்டுள்ளதாக கூறிய நூருல், அது குறித்து பேசலாம். ஆனால், இதில் முக்கியமானது மக்களின் குரலுக்கு செலி சாய்ப்பதாகும் என்று நூருல் மேலும் கூறினார்.

 

நமது அடையாளம் கூறும் கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

 

முன்பு, பங்சார் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் இந்தியர்கள் குடியேறிய இடங்களாக இருந்தன. ஆனால், இப்போது நமது அடையாளத்தைக் காட்ட இங்கு மிஞ்சி இருப்பது சொற்பமானவையே என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. கணபதிராவ் கூறினார்.

“நமது அடையாளங்களாக விளங்கும் கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியமாகும்’, என்று அவர் மேலும் கூறினார்.

பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் மற்றும் எஸ். ஜெயதாஸ் ஆகியோரும் அங்கிருந்தனர்.