கணக்கறிக்கை: ரிம1மில்லியன் கையாடிய அதிகாரிமீது நடவடிக்கை இல்லை

auditமலேசிய தலமைக் கணக்காளர் துறை(ஜேஏஎன்எம்)  அதிகாரி  ஒருவர்  கிட்டத்தட்ட  ரிம1மில்லியனைக்  கையாடல்  செய்திருக்கிறார்.  ஆனால், அவர்மீது  எந்த  நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை  என்பதைத்  2013  தலைமைக்  கணக்காய்வாளர் அறிக்கை  அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த  அதிகாரிக்குக்  கோரிக்கையற்றுக்  கிடக்கும்  பணத்தைக் கண்டால்  கொண்டாட்டம். பொய்யான  ஆவணங்களைத்  தயாரித்து  அமுக்கி விடுவார்.  அந்த  ஆசாமியின் மோசடி  வேலைகள்  2011  மார்ச்-சில்தான்  தெரியவந்தன.

“2011  மார்ச்,10-இல்  போலீஸ்  புகார்  செய்யப்பட்டது.  ஆனால், 2008  ஆகஸ்ட்  27-க்கும்   2010  டிசம்பர் 21-க்குமிடையில் மொத்தம் ரிம995,031.-ஐ  மோசடி  செய்து  கையாடிய  அவர்மீது  இதுவரை  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை”, என்று  அது  கூறிற்று.

வங்கிக்  கணக்குகளில்  ஏழாண்டுகளுக்குமேல்  எடுக்கப்படாமலிருக்கும்  பணமும்  ஓராண்டுக்குமேல்  கோரப்படாமல்  கிடக்கும்  நிதிகளும்  முடிவில் ஜேஏஎன்எம்-முக்கு  அனுப்பப்படுகின்றன.  உரியவர்கள்  வந்து  கேட்கும்வரை  அவற்றைப்  பாதுகாப்பது  அதன்  பொறுப்பாகும்.