விவேகனந்தா ஆசிரமம்: நாளை கூடும் அமைச்சரவை முடிவு காண வேண்டும்

-மு. குலசேகரன், நவம்பர் 13, 2014.

 

Vivekenanda Ashram1விவேகனந்தா ஆசிரமம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்துடன் அந்த ஆசிரம வாரியக்குழுவின் தலைவர் டாக்டர் அம்பிகைபாகன் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார்.

 

விவேகனந்தா ஆசிரம மேம்பாட்டுத் திட்டத்திற்கு பெரும்பாலான பொதுமக்களும் அரசு சார்பற்ற இயக்கங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், வாரியக்குழுவின் செல்வாக்கு மிக்க இதர உறுப்பினர்கள் வாளா இருப்பது அவர்களுக்கும் இதில் முழுச் சம்மதம் இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

 

இந்த மேம்பாட்டுத் திட்டம் இன்று நேற்று வேர் விட்டதல்ல. இதற்கு கடந்த சில ஆண்டுகளாக ஆரம்ப வேலைகள் செய்யப்பட்டு கடைசிக் kulaகட்டமாக இத்திட்டம் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமட் அப்துல்லா நஸ்ரி. விவேகனந்தா ஆசிரமம் ஒரு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

 

பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா விவேகனந்தா ஆசிரமம் பிரிக்பீல்ட்ஸ்சின் “ஆன்மாக்களில்” ஒன்று என்று வர்ணித்ததோடு அது அமைந்துள்ள இடம் மேம்படுத்தப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இவர்கள் இவ்வளவு வெளிப்படையாக விவேகனந்தா ஆசிரமம் மேம்படுத்தப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் வேளையில், மஇகா தலைவரும் அமைச்சருமான ஜி. பழனிவேல் இது வரை எதுவும் கூறாமால் மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது.

 

Palanivel-and-MICமஇகா தலைவர் ஜி. பழனிவேலுவின் மௌனம் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.

 

மஇகாவின் தலைவர் என்ற முறையில் ஜி. பழனிவேல் இந்த விவேகனந்தா ஆசிரமம் உடைபட மஇகா ஒருநாளும் அனுமதிக்காது என்று அறிவித்தால், அது இந்திய மக்களின் நம்பிக்கையை மேலும் வலுவுறச் செய்யும்.

 

துணைக்கல்வி  அமைச்சர் ப. கமலநாதன் இந்த ஆசிரமத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்காக கடந்த இரு வருடங்களில்  60 லட்சம் வெள்ளி மானியம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது  என்று  சொல்லப்படும் வேளையில், ஆசிரமத்தை  மேம்படுத்தி  அதன் வழி வரும் பணத்தைக் கொண்டு இப்பள்ளிகளை  நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பது தெளிவாகிறது.

 

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத்தான் இந்த ஆசிரம மேம்பாடு என்று  டாக்டர் அம்பிகைபாகன் கூறுவது கேள்விக்குரியது.

டாக்டர் அம்பிகைபாகனின் முந்தைய  செயல்பாடுகள் மக்கள் மனதில் இன்னும் பசுமையாகவே உள்ளன. மைக்காவில் அவர் ஆற்றிய “சேவைகளை” மக்கள் இன்னும் மறக்கவில்லை.  அந்த நிலைமை இந்த ஆசிரமத்திற்கும் வரக்கூடாது என்பதுதான் எனது ஆதங்கம்.

 

விவேகனந்தா ஆசிரமம் இந்திய சமூகத்தின் சொத்து. அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உரிமை கொண்டாடும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் இதற்கு ஆதரவு தரும் யாராயினும் மக்களின் சாபத்திற்கு ஆளாவர் என்பது நிச்சயம்.

 

மேலும், இந்த விவகாரத்திற்கு உடனடி தீர்வு காண அமைச்சரவை உறுப்பினர்களான ஜி. பழனிவேலும் டாக்டர் எஸ். சுப்ரமணியமும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

 

நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் அமைச்சரை கூட்டத்தில் அமைச்சர் நஸ்ரியின் துணையோடு நமது இரு அமைச்சர்களும் விவேகானந்த ஆசிரமம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.