கேமரன் காடழிப்பில் ‘அரண்மனைக்கும் பங்குண்டாம்’

interferenceபகாங் அரண்மனை,   கேமரன்  மலையில்  அதிகாரிகளின்  பணியில்  குறுக்கிட்டு, பாதுகாக்கப்பட்ட  பகுதிகளில்  காடழிப்புக்கு  ஒப்புதல்  அளிக்குமாறு  அவர்களைக்  கட்டாயப்படுத்தியதாக  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்(என்எஸ்டி)  செய்தி  ஒன்று  கூறியது.

கடந்த  வியாழக்கிழமை சில  உயிர்களைப்  பலிகொண்ட  கொடூர  நிலச்  சரிவும்  வெள்ளப்  பெருக்கும்  ஏற்பட்டதை  அடுத்து  இத்தகவல்  வெளிவந்துள்ளது.

அந்தக்  “குறுக்கீட்டுக்கு”  எடுத்துக்காட்டாக  பகாங்  அரச  குடும்பத்தைச்  சேர்ந்த  ஒருவரால்  எழுதப்பட்டதாகக்  கூறப்படும்   “மஞ்சள்  கடிதம்”  ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
அதுபோன்ற  கடிதங்களே,  கேமரன்  மலையில்  அத்துமீறி  காடுகள்  அழிக்கப்படுவதைத் தடுக்க  முடியாதபடி தங்கள் கைகளைக்  கட்டிப்  போட்டதாக  அதிகாரிகள்   கூறினர்.

ஆனால், மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி)  இந்தக்  காரணத்தை  ஏற்கவில்லை.

“அதிகாரிகள்  நினைத்திருந்தால்  சட்ட  அமலாக்கத்தில்  உறுதியாக  இருந்திருக்கலாம்.

“இடமாற்றம்  செய்யப்பட்டால்தான்  என்ன? எல்லாருமே  உறுதியாக  இருந்தால்  எத்தனை  பேரைத்தான்  இடமாற்றம்  செய்ய  முடியும்?

“நல்லவர்களின்  எண்ணிக்கை  குறைவு.   பேராசை  பிடித்த  பண்ணையாளர்களுடன்  கைகோத்துச்  செயல்படுவோரே  அதிகம்”, எனப் பெயர்  குறிப்பிடப்படாத  எம்ஏசிசி  அதிகாரி  ஒருவர்  கூறியதாக  என்எஸ்டி கூறியது.